திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல்

🕔 October 23, 2021

ரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேற்படி வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அனுமதி வழங்கியிருந்தார்.

முதற்கட்டமாக, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதேபோல், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளிலும் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்புகளை நடத்தும் போது, ​​மாணவர்களை பகுதி பகுதியாக அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கல்விச் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக அதிபர்களுக்கு முழுமையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விரைவில் ஏனைய தரங்களில் வகுப்புகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்