பத்தாயிரம் வர்ணக் கடதாசியில் மோட்டார் சைக்கிள்; அசத்துகிறார் கந்தபளை இளைஞர்
🕔 December 5, 2015



க. கிஷாந்தன் –
பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசி தாள்களை கொண்டு, நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர், அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார்.
மேற்படி இளைஞர் ஒரு சாதாரண விவசாயி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் இந்த இளைஞர் மக்களை வியக்கவைக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளார்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த இந்த இளைஞர், விவசாயத்தில் ஈடுபடுவதோடு, தனது மனைவி மற்றும் குடும்பத்தாரரின் உதவியுடன் இவ்வாறான அற்புதமான கலை உருவாக்கங்களைச் செய்து வருகின்றார்.
இவரின் இவ்வாறான உருவாக்கங்களை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுவதோடு, அவற்றினை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.
தனது இந்த திறமை குறித்து சந்திக அருண சாந்த தெரிவிக்கையில்;
“நான் கடதாசி தாள்களை கொண்டு பல உருவங்களை வடிவமைத்து வருகின்றேன். பணத்துக்காக இந்த முயற்சியில் நான் ஈடுபடவில்லை. நவீன உலகில், நாமும் ஆக்கங்கள் சிலவற்றினை உருவாக்க வேண்டும் என்கிற இலக்கினை மனதில் வைத்துக் கொண்டுதான், இவ்வாறான பணியினை மேற்கொள்கிறேன்”
தனது சொந்த செலவிலேயே இதுவரை காலமும் இவ்வாறான கைப்பணி வேலைகளை செய்து வந்ததாகக் கூறும் இவர், இப்போது செய்திருக்கும் இந்த மோட்டர் சைக்கிளின் உருவுக்காக சுமார் 30 ஆயிரம் ரூபாவினை செலவிட்டதாகவும், இதனை உருவாக்குவதற்கு 05 மாதங்கள் ஆனதாகவும் அருண சாந்த கூறினார்.
இவர் செய்து வரும் இவ்வாறான கலை உருவாக்கங்களுக்கு, வரவேற்பும், பாராட்டுகளும், சான்றிதழ்களும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Comments



