ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு

🕔 December 4, 2015
Mahinda - 096ர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு  அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினராக த் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை தனது முதலாவது உரையினை சபையில் ஆற்றினார். இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் முகாம்களுக்கு பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பிரகாரமே சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் திருகோணமலை முகாமிற்கு சென்றிருந்ததாக அவர் நினைவூட்டினார்.

அத்துடன், அமெரிக்க எவ்.பீ.ஐ நிறுவனத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, 2009ஆம் ஆண்டு தோற்கடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைதூக்க முயற்சித்த போதிலும், தனது அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

தேசிய பாதுகாப்பிற்கு தற்போது பாரிய அச்சுறுத்தல்கள் கிடையாது என்பதனை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசாங்கத்தினால் 11 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகவும், நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளவர்களை தான் விடுதலை செய்ய மறுத்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.

எனினும், பல இனவாத தமிழ் அரசியல் குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக, கொடூர பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல் மிக்க தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற நிலையில், ராணுவ உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

குறித்த பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், ராணுவ சட்டத்தின் கீழ் அல்லது சாதாரண சட்டத்தின் கீழாவது அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மாவீரர் தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும், அதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு பிரபாகரன் நினைவு கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறைக் கைதிகளின் விடுதலையை உறுதி செய்யுமாறு கோரி, 17 வயதான பாடசாலை மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் யாருடைய தூண்டுதலும் இன்றி இதனை செய்திருக்க முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி அமைப்பிற்கு ஆதரவான 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தடை நீக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்புக்கள் மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன ஈழ கொடியை ஏந்தியவாறு பிரபாகரனை நினைவு கூர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும், இந்த அரசாங்கம் எவ்வித பொறுப்புமின்றி அவர்கள் மீதான தடையை நீக்கியதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வட மாகாணத்திலுள்ள ராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை மேற்குல நாடுகளிலிருந்து, நாட்டிற்கு வருகின்ற அதிகாரிகள் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவம் தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கூறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் கூறினார்.

அரசாங்கத்தின் தவறான வெளிநாட்டு கொள்கையே இவை அனைத்திற்கும் காரணம் என மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

சில நாடுகளிலுள்ள அரசாங்கங்கள் தமது நாட்டின் வாக்குவங்கிகளை கருத்திற் கொண்டு, தமிழ் டயஸ்போராக்களின் அழுத்தங்களின் நிமிர்த்தம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை பேரவையின் பிரேரணையை, இலங்கை அரசாங்கம் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த யோசனையின் பிரகாரம் ராணுவத்தினருக்கு எதிரான யுத்தக் குற்ற நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்காக, வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இணைத்து, அதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் நிதியுதவிகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவம் புனர் ஸ்தாபிக்கப்படுமாயின், தமது நாடு 06 மில்லியன் பணத்தினை வழங்குதாக பிரித்தானிய பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து குறிப்பிட்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராணுவத்தை புனர் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும், வெளிநாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி அமைப்பை தோற்கடிப்பதற்காக பல்வேறு வகையில் முயற்சிகளை வழங்கிய ராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தினை வழங்கி வீட்டிற்கு அனுப்பும் திட்டமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தனக்கு அறியக்கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்