ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

🕔 September 30, 2021

க. கிஷாந்தன்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதோடு, அருகிலிருந்த மண்மேட்டிலும், வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடனும் மோதி குடைசாய்ந்தது.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறே, இந்த விபத்துக்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments