ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம்

🕔 September 7, 2021

லங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் என வெளிவாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக ராஜாங்க அமைச்சர் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண; “இலங்கையின் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பில் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

“உண்மையில் அது இறுதி செய்யப்படவில்லை. அது பற்றி என்னால் அவ்வளவுதான் கூற முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இது தொடர்பாக விசாரித்த போது, ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – இந்த செய்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்று ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கப்ரால் முன்பு பணியாற்றியுள்ளார். 01 ஜூலை 2006 முதல் 09 ஜனவரி 2015 வரை, அவர் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்