மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

🕔 August 14, 2021

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி, உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் குழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்பாராத அளவில் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, மக்களுக்கு அவசியமான சுகாதார சேவையின் இயலுமை குறைந்து கொண்டு செல்வதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

உயிர்களைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

2021மே மாதம் இருந்தது போன்ற இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றினால், 2022 ஜனவரிக்குள் இடம்பெற வாய்ப்புள்ள மரணத்தில் 18,000 பேரையாவது காப்பாற்றலாம் எனவும் கூறியுள்ளனர்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றுவதைத் துரிதப்படுத்துமாறும் அரசை வேண்டியுள்ளனர். தாமதம் மரணவீதத்தை அதிகரித்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது உள்ள கட்டில்களில் 85% இற்கு அதிகமாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) 90% இற்கு அதிகமாகவும் நோயாளிகளின் பாவனையில் உள்ளன. நோயாளிகள் அதிகரிக்கும் வேகம் இதில் போதாமையை ஏற்படுத்தி விடும். ஒக்சிஜன் தேவையுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வாரம் 528 ஆக இருந்த இத்தொகை, நேற்றுமுன்தினம் 646 ஆக அதிகரித்துள்ளது.

பிசிஆர் பரிசோதானையில் 20% பொசிற்றிவ் என்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களில் கணிசமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சேவையை மட்டுப்படுத்த வேண்டிய நிலை தோன்றிவிடக் கூடும். அதற்கான அழுத்தங்கள் உள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் களைப்புற்று தடுமாறிக் கொண்டிருக்கும் சமிக்ஞைகள் வெளித்தெரிகின்றன.

ஓகஸ்ட் இறுதிக்குள் 50% மானோர் தடுப்பூசி ஏற்றி விடுவர் என மொனாஷ் பல்கலைக்கழகம், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் (WHO SEAR), உலக சுகாதார நிறுவனம் (WHO) இலங்கை அலுவலகம் ஆகியன இணைந்து மேற்கொண்ட கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயணத் தடை நிலவரத்தின்படி, செப்டம்பர் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு 6000 நோய்த்தொற்றுக்கான சந்தர்ப்பங்கள் தெரிகின்றன. ஒக்டோபர் ஆரம்பத்தில் உச்சநிலை ஏற்பட்டு தினமும் 220 மரணங்கள் நிகழலாம். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) 275 பேரை அனுமதிக்கப்பட வேண்டி வரும். இப்படியே போனால் 2022 ஜனவரி அளவில் சுமாராக 30,000 பேர் இறக்க நேரிடும்.

தடுப்பு மருந்தேற்றல் பற்றிய கணிப்புகள் எம்மிடம் இல்லை என்பதால், இந்த எதிர்வுகூறல் கூட குறைந்த அளவாக இருக்கலாம். (சிலவேளை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது).

அடுத்த ஒரு மாதத்துக்கு, நாடு மிக இறுக்கமான சூழலைப் பேணினால் (குறிப்பாக மக்கள் நடமாட்டத்தை மேலும் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால்), தொற்று மற்றும் மரண வீதம் குறைவடையலாம். அவ்வாறான நிலையில் ஒக்டோபர் 2021 இல் நோய்த்தொற்று ஒருநாளைக்கு 1000 ஆகவும், மரணவீதம் 25 ஆகவும், அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அனுமதி 25 ஆக மாற/குறைவடைய வாய்ப்புள்ளது.

இதனால் 2022 ஜனவரியில் குறைந்தபட்சம் 18,000 பேரின் மரணத்தையாவது தவிர்க்கலாம். (30,000 -18,000 = 12,000) உண்மையிலேயே இது கவனத்தில் கொள்ள வேண்டிய பெரிய தொகையாகும். இதற்காக இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் வருமாறு;

  • பயணத் தடை மக்கள் நடமாட்டம்ட ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தல்.
  • அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த தேவைககளுக்கன்றி, மாவட்டங்களிடையிலான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தல்.
  • இதனை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு அவசரகால/ ஊரடங்கு நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டி வரலாம். பெரிய நிலப்பரப்பில் அல்லது நாடளாவிய ரீதியில் இதைச் செய்யலாம்.
  • அடுத்த 03 வாரங்களுக்கு அனைத்துப் பொதுநிகழ்வுகளையும் ரத்துச் செய்தல்.
  • சுகாதாரப் பணியாளர்கள் விடயத்தில் கவனமெடுத்து, அவர்களைப் பாதுகாத்தல் வேண்டும். வைத்தியசாலைகளுக்கு போதிய பணியாளர்களை வழங்கி, அத்தியாவசிய சுகாதார சேவைகளில் தடையேற்பட்டு விடாது நிலமையைக் கையாள்தல்.
  • பொதுமக்களுடனான தொடர்பாடலை சீராக மேற்கொள்ளும் வினைத்திறனான தொடர்பாடல் திட்டமிடலை (Effective Communication Plan) மேற்கொள்ளல்.
  • அதன்மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (Control Measures) தொடர்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவூட்டுதல்.
  • கள நிலவரம் பற்றிய, இதைவிடச் சிறப்பான கணிப்பைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யும், துல்லியமான அறிக்கையிடலை (Accurate Reporting) மேற்கொள்ளல். பரிசோதனை பொசிற்றிவ் வீதம் (Test Positivity Rate -TPR), வாராந்த மக்கள் நகர்வுச் சராசரி, நேரத் தொடரை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு, நகர்வுப் புள்ளிவிவரம் போன்ற பதிலீட்டுக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தலாம்.
  • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னுரிமை அளித்தல். பிஃபைசர் (Pfizer), மொடேனா (Moderna) அல்லது அஸ்ரா செனிகா (Astra Zenica) இவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இரண்டாவது டோஸ் வழங்கப்படும் வரை, குறைந்தபட்சம் ஒரு டோஸாவது ஓரளவு இவர்களுக்கு பாதுகாப்பைத் தரும்.

நன்றி: டெய்லி மிரர் (தமிழில்: சிராஜ் மஷ்ஹூர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்