கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம்

🕔 August 1, 2021

ட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே, தற்போதைய அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கிய எம்.எஸ். தௌபீக்குக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியை, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்கியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய ஆதங்கத்தினைப் பதிவு செய்துள்ள சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

உலகின் மிகப்பெரும் ஏமாற்றுக்காரர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வலுத்த புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஏமாற்றுதல் என்பது மிகப்பெரிய கலை. அதுவொரு கெட்ட கலை. மக்களுடைய மறதி ஏமாற்றுக்காரனின் பெரிய மூலதனம். அதனாலேயே ஒரு முறை ஏமாந்தவர்களை ஏமாற்றுக்காரனால் மீண்டும் பலமுறை ஏமாற்ற முடிகிறது.

இலங்கையின் பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்களை தொடர்ந்தும் ஏமாற்றி பதவிகளை அடைந்து கொள்ளும் இந்த அரசியல் தரகர்கள் – யாரை எதிரியாக காட்டி தேர்தல்களை வெல்கிறார்களோ அவர்களிடமே சரணாகதியாகி விடுவது ஒன்றும் புதிதல்ல.

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அக் கட்சிக்கே அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை ஒரு பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் இவ்வளவு வடிவாக செய்துவிட இயலும்?.

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெற முட்டுக்கொடுத்த போது, ‘நானில்லை அவர்கள்தான்’ என்று கட்சித்தலைவர் முஸ்லிம் சமூகத்துக்கு காதில் சொருக முயன்ற பூ வழுக்கி விழுந்துள்ளது.

ஆனால் சமூகத்துக்கோ பூவும் விளங்கப்போவதில்லை, அது வழுக்கி விழுந்ததும் விளங்கப்போவதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்