மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம்

🕔 August 1, 2021

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தௌபீக் குறிப்பிட்டுள்ளார்.

மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்த சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தமையினை அடுத்து, மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமானது.

இதனையடுத்தே அந்த பதவிக்கு தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அமைப்பாளர் பதவியை இவ்வாறு வழங்குவதாக, மு.கா. தலைவர் அறிவிப்பு செய்யும் வீடியோ பதிவு ஒன்றினையும், நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

எம்.எஸ். தௌபீக் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிலையில், இந்த நியமனத்தை தௌபீக்குக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்கியுள்ளமை கவனிப்புக்குரியதாகும்.

எம்.எஸ். தௌபீக் 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த போதும், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த நியமனம் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவிய போது, குறித்த பதவிக்கு தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக – தான் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றும், விடயத்தை உறுதிப்படுத்திய பின்னர் அறியத்தருவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்