முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

🕔 July 30, 2021

– மரைக்கார் –

முகம்மது நபியவர்களை இழிவாக எழுதியமையை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவருக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர், எம். ஜலீல், எம்.என்.என். றணீஸ் ஆகியோர் இணைந்து, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் காரைதீவு தவிசாளருக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

முகம்மது நபியவர்களை இழிவாக எழுதி – ரெஜினோல்ட் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இதனை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்திருந்திருந்தார்.

இதனையடுத்து – முஸ்லிம்கள் உயிருக்கு இணையாக நேசிக்கும் முகம்மது நபியவர்களை தூசித்து எழுதப்பட்ட பதிவை, தவிசாளர் எனும் முக்கிய பொறுப்பிலுள்ள ஜெயசிறில் என்பவர் ‘பேஸ்புக்’கில் பகிர்ந்தமையின் ஊடாக, சக மதத்தினை நிந்தித்துள்ளதோடு இனைங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சித்துள்ளார் என, இவ்விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ஜெயசிறில், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்திருந்த குறித்த பதிவை நீக்கி விட்டார்.

இந்த நிலையில், காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலின் மேற்படி செயற்பாட்டுக்கு, அச்சபையின் உதவித் தவிசாளர் ஜாஹிர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

படம்: நூருல் ஹுதா உமர்

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, தனது கண்டனத்தை உப தவிசாளர் ஜாஹிர் வெளிப்படுத்தினார்.

காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சில காலமாக முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுவதாகவும், பேஸ்புக்கில் எழுதி வருவதாகவும், இந்த ஊடக சந்திப்பில் உப தவிசாளர் ஜாஹிர் குற்றஞ்சாட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்