றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள்

🕔 July 30, 2021

– மரைக்கார் –

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பெண் பிள்ளையொருவர் தீக் காயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்த விடயமானது, ‘கண்டவர்களெல்லாம் கம்பெடுத்து வேட்டைக்காரர்களாகும் விவகாரமாக’ மாறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

றிசாட் பதியுதீன் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி எனும் பெண் பிள்ளையொருவர் பணியாற்றி வந்த நிலையில் மரணமடைந்தார்.

இது விடயத்தில் பல்வேறு தகவல்கள், கதைகள், ஊகங்கள், கட்டுக்கதைகள், அவதூறுகள் மற்றும் இட்டுக்கட்டல்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.

இந்த விடயத்தில் ஊர்ஜீதப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ செய்திகளை மட்டும் வெளியிட வேண்டிய – பொறுப்புமிக்க ஊடகங்கள் கூட, வெறும் அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும், காதுவழிச் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றமை கவலைக்குரியதாகும்.

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பிள்ளை – தீப் பற்றிய போது, அந்த வீட்டில் றிசாட் பதியுதீன் வீட்டாரும், அங்கு வழமையாக இருப்போரும் தவிர வெளியாட்கள் எவரும் இருக்கவில்லை என அறிய முடிகிறது. அப்படியென்றால் அங்கு என்ன நடந்தது என்பதை அப்போது அங்கிருந்த றிசாட் பதியுதீன் வீட்டார்தான் கூற வேண்டும். அவர்கள் சொல்வது பொய் என்றால், அதனை பொலிஸார் கண்டுபிடிக்க வேண்டும்.

நான்கு வகைச் சாத்தியங்கள்

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினி எனும் அந்தப் பிள்ளை தீப்பற்றியமைக்கு காரணம் என்ன என்பது இன்னும் நிரூபணமாகவில்லை. ஆனாலும் பின்வரும் நான்கு காரணங்களில் ஒன்றினால் அது நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

01) அது தற்செயலாக நடந்த ஒரு தீ விபத்தாக இருந்திருக்கலாம்.
02) அந்தப் பிள்ளை தன்மீது தீ வைத்திருக்கலாம்.
03) றிசாட் பதியுதீன் வீட்டார் அந்தப் பிள்ளை மீது தீ வைத்திருக்கலாம்.
04) வெளியார் யாராவது வந்து, அந்தப் பிள்ளைக்கு தீ வைத்திருக்கக் கூடும்.

ஆனால், அந்தப் பிள்ளை தீப்பற்றி எரிந்து கத்திய சத்தம் கேட்ட பின்னர்தான், தாம் ஓடிச் சென்று – அவரில் பற்றியிருந்த தீயை அணைத்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக றிசாட் பதியுதீன் வீட்டார் கூறுகின்றனர்.

இது பொய் என்றால், உண்மையைப் பொலிஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த நிலையில் அவதூறுகளையும் கட்டுக் கதைகளையும் காதுவழிச் செய்திகளையும் பல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. போதாக் குறைக்கு, ஏனைய சமூகங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும் இவ்வாறான அவதூறுகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.

தனிநபர் ஒருவரின் வீட்டில் நடந்த சம்பவமாகப் பார்க்கப்பட வேண்டிய இஷாலினியின் மரணமானது, தற்போது முஸ்லிம் ஒருவரின் வீட்டில் நடந்த விடயமாக பேசப்படுகிறது. இதனால் மலையக தமிழர் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான விரிசலாகவும் முறுகலாகவும் இவ்விடயம் மாறியிருப்பதை சமூக ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது.

றிசாட் பதியுதீன் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் உள்ளார். அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அவர் தடுப்புக் காவவில் இருக்கும் போதுதான், அவர் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் நடந்துள்ளது.

றிசாட் பதியுதீன் தரப்பினர் இவ்விடயத்தை ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த துயரம்’ போல் பார்க்கின்றனர். ஆனால், றிசாட் பதியுதீனின் அரசியல் எதிராளிகளில் சிலர் – இந்த விடயத்தை ‘பழம் நழுவி பாலில் விழுந்ததைப்’ போல் பார்க்கின்றார்கள்.

அவதூறுகளும், கட்டுக் கதைகளும்

றிசாட் பதியுதீனின் அரசியல் எதிராளிகளுக்கு ஆதரவான சில சிங்கள ஊடகங்கள், றிசாட் பதியுதீன் வீட்டில் நடந்த இஷாலினியின் மரணம் தொடர்பில் பல்வேறு அவதூறுகளை செய்திகளைப் போல் வெளியிட்டு வருகின்றன. அதேவேளை இந்த அவதூறுகளை, மிக முக்கியமான தமிழ் ஊடகங்களும் அப்படியே மொழிபெயர்த்து வெளியிடுகின்றமையினையும் காண முடிகிறது.

றிசாட் பதியுதீன் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை நிறைவடைந்தமையினை அடுத்து, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது சிங்கள ஊடகமொன்று வெளியிட்டிருந்த செய்திகளில் ஒன்று கட்டுக்கதையாக அமைந்திருந்தது.

‘றிசாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருநாளில், அவர் அங்குள்ள மலசலகூடத்துக்குச் செல்லும் போது, கையில் கடதாசிபோல் ஒன்றைக் கொண்டு சென்றாராம். இதனை அங்கிருந்த சிஐடி உத்தியோகத்தர்கள் அவதானித்தார்களாம். பிறகு மலசல கூடத்துக்குள் சென்ற றிசாட் பதியுதீன் அங்குள்ள ஜன்னல் வழியாக கடதாசியில் சுற்றப்பட்ட எதையோ எறிந்தாராம். அவ்வாறு எறிந்ததை சிஐடி உத்தியோகத்தர்கள் பொறுக்கிப் பார்த்தார்களாம். அதனுள் மாத்திரைகள் சில இருந்தனவாம். அவற்றினை கொண்டு போய் அங்குள்ள வைத்தியரிடம் காண்பித்த போது, அவை றிசாட் பதியுதீனுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் என வைத்தியர் கூறினாராம்’. இதுதான் குறித்த சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியாகும்.

இதனை அப்படியே மொழிபெயர்த்து, பல தமிழ் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இந்தச் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் சொல்ல முயற்சிப்பது என்னவென்றால், றிசாட் பதியுதீன் தனக்கு நோய் உள்ளதாகப் பொய் சொல்லித்தான் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளார் என்பதாகும்.

இது ஓர் அவதூறுச் செய்தியாகும் என்பதை, அதனைப் படிக்கும் சாதாரண மக்களும் புரிந்து கொள்வர். தனக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை றிசாட் பதியுதீன் விழுங்காமல் வீச வேண்டுமென்றால், அவற்றினை அவர் செல்லும் கக்கூஸ் ‘பேசின்’ உள்ளே போட்டு – தண்ணீரை ஊற்றியிருக்கலாம். அதுவே அந்த மாத்திரைகளை யாரும் காணாமல் அழிப்பதற்குரிய சிறந்த வழியாகும். மேலும் அவரும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறையாகவும் இருந்திருக்கும். அப்படிச் செய்யாமல் ஏன் அந்த மாத்திரைகளை கக்கூஸ் ஜன்னல் வழியாக அவர் எறிந்து மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வியைக் கூட யோசியாமல் அந்த கட்டுக்கதையை அந்தச் சிங்கள ஊடகம் எழுதியிருந்தது.

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினி எனும் பிள்ளைக்கு என்ன நடந்தது என்பது முதலில் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் பல தனிநபர்கள் எந்தவிதமான ஆதராங்களுமின்றி றிசாட் தரப்பினரை எடுத்தாற்போல் குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிப்பதுதான் நேர்மையற்ற செயற்பாடாகத் தெரிகிறது.

இஷாலினி எப்போது வேலைக்குச் சேர்ந்தார்?

இஷாலினி – 16 வயதுக்குக் குறைந்தவராக இருந்த போது, றிசாட் பதியுதீன் வீட்டில் வேலைக்காகச் சேர்க்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், 16 வயது நிறைவடைந்த பின்னர்தான் இஷாலினியை தமது வீட்டில் வேலைக்குச் சேர்த்ததாக றிசாட் தரப்பினர் கூறுகின்றனர்.

இஷாலினி 2004ஆம் ஆண்டு நொவம்பர் 12ஆம் திகதி பிறந்தார். அவர் 15 வயதும் 11 மாதமாகும் போதுதான் றிசாட் பதியுதீன் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஆனால், 16 வயது நிறைவடைந்த பின்னர் 2020ஆம் ஆண்டு நொவம்பர் 18 ஆம் திகதிதான் தமது வீட்டில் இஷாலினி பணிக்குச் சேர்ந்ததாக றிசாட் தரப்பு கூறுகிறது.

மரணமடைந்த இஷாலினியின் பிரேத பரிசோதனைச் சான்றிதழில், அவர் ‘கர்ப்பமடையாமல் நாட்பட்ட புணர்ச்சிக்கு (யோனி ஊடுருவல்) உட்பட்டுள்ளார்’ (The autopsy revealed evidence of chronic vaginal penetration without feature of gravid/pregnant uterus) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஷாலினி மரணமடையும் போது அவர் 16 வயதும் 08 மாதங்களும் நிரம்பியவர். றிசாட் பதியுதீன் தரப்பு கூறுவதன்படி, அவர்கள் வீட்டில் சுமார் 08 மாதங்களே இஷாலினி பணியாற்றியுள்ளார். இந்தப் பின்னணியில் இஷாலினி நாட்பட்ட பாலியல் புணர்ச்சிக்கு உட்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது நடந்தது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சட்டத்தின்படி 16 வயதுக்குட்பட்ட ஒருவருடன் – அவரின் விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் ஈடுபடுவதும் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை இவ்வாறிருக்க நேற்றைய தினமும் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. நீதி மறுக்கப்படும் போதுதான் அதனைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதைக் கண்டிருக்கின்றோம். ஆனால், றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர் உள்ளிட்ட பலர், இஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். இஷாலினியின் பிரேதத்தை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு அமைய, நேற்று வெள்ளிக்கிழமை (30ஆம் திகதி) அவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்பாட்டங்களின் பின்னால் உள்ள அரசியல்

இவ்வாறு இஷாலினியின் மரணம் தொடர்பில் சட்டம் தன் கடமையை சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருக்கும் நிலையில், ‘நீதி கோரி’ ஏன் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன என்கிற கேள்விகளும் உள்ளன. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் பலவற்றின் பின்னணியில் ‘அரசியல்’ உள்ளதாகக் கூறப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

  • றிசாட் பதியுதீன் வீட்டில் இஷாலினி ஒரு சிறுமியாக சட்டத்துக்கு முரணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் அது குற்றமாகும்.
  • இஷாலினியின் மரணம் தொடர்பில் நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
  • இஷாலினி விவகாரத்தில் றிசாட் பதியுதீன் தரப்பு குற்றமிழைத்திருந்தால் அவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

அதற்கு முன்னதாக வெறும் கதைகளை, அவதூறுகளை, வாய்வழிச் செய்திகளை – எழுதியும் பேசியும் சமூகங்களுக்கிடையில் கசப்பினையும் குரோதத்தினையும் உண்டுபண்ணும் செயல்களை யாரும் செய்யக் கூடாது என்பதும், அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுமே நேர்மையாகச் சிந்திப்பவர்களின் விருப்பமாக உள்ளது.

இன்னொருபுறம் இஷாலினியின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டவர் முஸ்லிம் என்றும், அதனால் அதில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் இஷாலினியின் தயார் கூறியுள்ளார்.

வைத்தியர்கள் – அனைத்து விதமான பாகுபாடுகளையும் கடந்தே தமது தொழிலைச் செய்வோம் என உறுதியெடுத்துள்ளனர். அவ்வாறான வைத்தியத் தொழிலுக்கு இன ரீதியாகச் சாயம் பூசி, இஷாலினியின் தாயார் கொச்சைப்படுத்தியுள்ளார். ஆனால், இதற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்ட எந்தவொரு வைத்தியர் அமைப்புக்களும் தமது கண்டனங்களை தெரிவிக்கவில்லை என்பதும் கவனிப்புரியதாகும்.

இஷாலினி விவகாரத்தை அதிகமானோர் உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதாகவே தெரிகிறது. கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும் அதனைப் பார்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்