ஆறாத காயம்

🕔 November 26, 2015

Article - 45 - 01
ழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும்.

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப் பற்றியெரிந்த விவகாரம். இப்போது அணைந்துபோய் கிடக்கிறது. தேர்தல்கள் வரும்போதும், அரசியல்வாதிகளுக்குத் தேவைகள் வரும்போதும், இந்த விவகாரத்துக்குத் தீ மூட்டப்படும். பின்னர், அரசியல்வாதிகளின் தேவை முடிந்ததும் – இந்த விவகாரம் ‘நீரூற்றி’ அணைத்து விடப்படும். அல்லது, அதுவே தானாக அணைந்து விடும்.

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, நுரைச்சோலை வீட்டுத் திட்டம். சஊதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியம்’ இதற்காக, இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள், வைத்தியசாலை, சந்தைத் தொகுதி, ஆண் – பெண் பாடசாலைகள், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் என்று, அனைத்தும் உள்ளடங்கிய ஒரு ‘குட்டி நகரம்’ போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்தை இப்போது பார்த்தால் கவலைப்பட்டுப் போவீர்கள்.

காடு பிடித்து, சேதமடைந்து, விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது நுரைச்சோலை வீட்டுத் திட்டம். இங்குள்ள கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. எவருக்கும் பயனற்றுக் கிடக்கும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு ஏன் இந்த நிலை என்பதற்குப் பின்னால் மிகக் கேவலமானதொரு அரசியல் கதை உள்ளது.

நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த வீட்டுத் திட்டத்தினை நிர்மாணிக்கும் பொறுப்பு, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் வந்தது. அப்போது அந்தத் துறையின் அமைச்சராக திருமதி பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார்.

2010 ஆம் ஆண்டு நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆயினும், வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை வழங்குவதில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உருவாகின. அதனால்தான், இந்த வீட்டுத் திட்டம் இப்போது பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது.

நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வின் போதே, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் கூத்துக்கள் ஆரம்பித்திருந்தன.

நுரைச்சோலை என்கின்ற இடம், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊர் அக்கரைப்பற்று. நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் அமைச்சர் அதாஉல்லா, பலம் பொருந்திய ஓர் அமைச்சராக இருந்தார். எனவே, அக்கரைப்பற்றுக்குள் தன்னை மீறி, எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் அப்போதைய அமைச்சர் அதாஉல்லா கவனமாக இருந்தார்.

இந்த நிலையில்தான், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் தலைமையில் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப விழா நடைபெறுவதாக இருந்தது. இது அதாஉல்லாவுக்குப் பிடிக்கவில்லை. தனது பிரதேசத்தில், அதுவும் தனது தலைமையில்லாமல், பேரியல் அஷ்ரப் வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றினை ஆரம்பித்து வைப்பதை, அதாஉல்லாவினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால், பேரியல் அஷ்ரப் கலந்து கொண்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வினைக் குழப்புவதற்கான, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து, அந்த ஆரம்ப நிகழ்வினை அவசரமாக முடித்து வைக்க நேர்ந்தது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலைக்கு எல்லையில் அமைந்துள்ளது தீகவாபி கிராமம். இது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்டபட்டது. நூறு வீதம் சிங்கள மக்கள் தீகவாபியில் வாழ்கின்றனர். எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்கள் குடியேறினால், அது தீக்கவாபி பிரதேசத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று, தீகவாபி மக்களிடம் பிரசாரமொன்று முன்னெடுக்கப்பட்டது. தீக்கவாபி பிரதேசத்தில் அப்போதைய அமைச்சர் அதாஉல்லாவுக்கு விசுவாசமான ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்தார். அந்த நபர் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை வைத்தே இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றபோது, அதற்கு எதிராக தீகவாபியிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில்தான், பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதாஉல்லாவின் வலது கையாகச் செயற்பட்ட நபரொருவர்தான், இவை அனைத்தையும் திட்டமிட்டுச் செயற்படுத்தினார். ஆனால், இப்போது அந்த வலது கை, அதாஉல்லாவை விட்டுப் பிரிந்து வந்து, மு.கா.வில் இணைந்து, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் சில காலங்களுக்கு முன்னர், ஒரு நேர்காணலில் நாம் கேட்டோம். ‘நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை தடுப்பதற்காக, தான் இப்படியெல்லாம் செய்ததாகக் கூறப்படும் கதைகளெல்லாம் பொய்யானவை’ என்று கூறி, அனைத்தையும் அவர் மறுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரும், அதனை உரிய பயனாளிகளுக்கு வழங்க முடியவில்லை என்பதுதான் இங்கு வேதனையான விடயமாகும்.

‘நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கக் கூடாது’ என்று தெரிவித்து, ஜாதிக ஹெல உறுமய – உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தது. அதற்குரிய தீர்ப்பு 01 ஜுன் 2009 அன்று வழங்கப்பட்டது. ‘நுரைச்சோலை வீடுகளை தனி இனமொன்றைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கக் கூடாது என்றும், அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி மேற்படி வீடுகளை நீதியாகப் பகிர்ந்தளிக்குமாறும்’ அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதிபதிகள், குறித்த தீர்ப்பினை வழங்கியிருந்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கூட, இதுவரை எதுவும் நடக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் குடும்பங்கள்;தான் சுனாமி அனர்த்தத்தினால் அதிகமாக வீடுகளை இழந்தன. ஆனால், அவர்கள் அனைவருக்கும் இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை. இதேவேளை, இந்த மாவட்டத்தில் 12 சிங்களக் குடும்பங்கள் சுனாமியினால் தங்கள் குடியிருப்புக்களை இழந்தபோதும், 102 வீடுகளை அந்த சமூகம் பெற்றுள்ளது. அதேபோன்று, தமிழர் தரப்பிலும், அழிவடைந்த வீடுகளுக்கு அதிகமாகவே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாதொரு நிலையில், சுனாமியினால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகளை, சுனாமியினால் பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்குவதென்பது, நியாயமான செயற்பாடாக இருக்குமா எனத் தெரியவில்லை. அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்து இனங்களையும் உள்ளடக்கி இந்த வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டுமாயின், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைத் தவிர, மற்றைய சமூகங்களில் வீடுகளைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்கள் என்று யாருமில்லை. காரணம், சுனாமியினால் இருப்பிடங்களை இழந்த ஏனைய சமூகங்களைச் சேர்ந்த அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டு விட்டன.

இதேவேளை, நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை முழுமையாக முஸ்லிம்களுக்கு வழங்குவதில், முன்னைய ஆட்சியாளர்களும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை, அவர்களின் போக்குகளிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், மஹிந்த ராஜபக்ஷ அரசில் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் நிலவிய ‘அடிபிடியு’ம், நுரைச்சோலை வீட்டுத் திட்டப் பிரச்சினையை வென்றெடுக்க முடியாமைக்கான காரணமாக அமைந்திருந்தது.

மறுபுறம், நுரைச்சோலை வீடுகளை ஒட்டு மொத்தமாகக் கைப்பற்றி அதனை, சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமொன்று, சிங்கள இனத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் ஒருவருக்கு இருந்ததாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிருவாக சேவை தரத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார். மேற்படி பிரதியமைச்சர், ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். இவர், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் ஒருவருக்கு உறவுமுறையானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை வீடுகளை, சுனாமியினால் குடியிருப்புகளை இழந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்கிற எண்ணம், முன்னைய ஆட்சியாளர்களின் மனதில் இருந்திருந்தால், அதனை மிக இலகுவாக அவர்கள் முடித்திருக்கலாம். ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் தாண்டிச் செயற்பட முடியும்’ என்பதன் அடிப்படையில், நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் என்கிற ‘காயம்’ ஆறாமல் இருப்பதே, முன்னைய ஆட்சியாளர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.

ஆயினும், தற்போது நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. நடப்பது நல்லாட்சி என்று கூறப்படுகிறது. ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையிலாவது நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினை, உரிய பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசியல்வாதிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்தல் அவசியமாகும்.

மேலே, ‘அரசியல்வாதிகள்’ என – நாம் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளபோதும், அம்பாறை மாவட்டத்தில் இப்போது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மூவர் மட்டுமே உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆளுந்தரப்பில் உள்ளது. மட்டுமன்றி, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டிய முழுப்பொறுப்பினையும் மு.காங்கிரஸ்தான் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். அது அந்தக் கட்சியினுடைய கடமையுமாகும்.

நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் மு.காங்கிரஸ் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என, சில மாதங்களுக்கு முன்னர் மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர்கள் வினவினர். மு.கா. தலைவர் ஹக்கீம் இதற்குப் பதிலளிக்கையில்ளூ ‘நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. எனவே, இது தொடர்பில் சட்ட ரீதியான சில செயற்பாடுகளை முதலில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னர், நுரைச்சோலையிலுள்ள வீடுகளை நிச்சயமாக உரிய பயனாளிகளுக்கு நாம் பெற்றுக் கொடுப்போம்’ என்றார்.

நுரைச்சோலையிலுள்ள வீடுகளும், கட்டிடங்களும் தொடர்ந்தும் அழிவடைகிறது. அந்த வீட்டுத் திட்டத்தினை தற்போது உள்ளது போல் பயனாளிகளுக்கு வழங்க முடியாது. முதலில் அங்குள்ள காடுகளையும், பற்றைகளையும் அழிக்க வேண்டும். சேதமடைந்த வீடுகள், கட்டிடங்களைத் திருத்த வேண்டும். அங்கிருந்து திருடப்பட்ட பொருட்களுக்கு மாற்றீடாக, புதிய பொருட்களைப் பொருத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்து, நல்ல நிலையில்தான் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினைப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இன்னும் சில காலம், நுரைச்சோலை வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் இழுத்தடிப்பு நிகழுமானால், பிறகு – அந்த வீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தவே முடியாததொரு நிலை உருவாகி விடும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்விவகாரத்தில் மு.காங்கிரஸ் வேகமாகச் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில், நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசினரை அதாஉல்லாவும், அதாஉல்லாவை முஸ்லிம் காங்கிரசினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில், மு.காங்கிரஸ்தான் ஏகபோக அரசியல் செய்கிறது. அங்கு அவர்களின் செயற்பாட்டுக்குக் குறுக்கே நிற்க, இப்போது அதிகாரத்தில் எவருமில்லை.

எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் இனியும் இழுத்தடிக்கப்படுமானால், அதற்கான அனைத்துப் பொறுப்புகளையும், முஸ்லிம் காங்கிரஸ்தான் தலையில் சுமக்க வேண்டும்.

நுரைச்சோலை விவகாரம் என்பது, வெறும் வீட்டுப் பிரச்சினையல்ல. கடலிடம் தங்கள் சந்தோசங்களைக் காவு கொடுத்த, ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்க்கைப் பிரச்சினையுமாகும்.

நன்றி: ‘தமிர் மிரர்’ பத்திரிகை (25 நொவம்பர் 2015)Nuraicholai - 097Nuraicholai - 098
Nuraicholai - 096Nuraicholai - 095Comments

புதிது பேஸ்புக் பக்கம்