துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி

🕔 July 13, 2021

துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த மேற்படி பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.

எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுவதால் சம்பந்தப்பட்டவர்கள் வழங்கும் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்து பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் வீடியோ பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வசதிகளை மாகாண மட்டங்களில் ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது (09) மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை நிறுவுவதற்காக, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்