அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

🕔 July 9, 2021

– மரைக்கார் –

ட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து வருகின்றமை கசப்பான உண்மையாகும்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் மௌலவி ஏ.எல். காசிம், அக்கரைப்பற்று பிரதேசவாதிகளால் எதிர்கொண்ட நெருக்குவாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

2017ஆம் ஆண்டு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மௌலவி காசிம் பணியாற்றியபோது, அக்கரைப்பற்று பிரதேச வாதம் கொண்டோர், அவரை மூதூருக்கு இடமாற்றம் செய்தனர். அந்த இடமாாற்றம் அநீதியானது என்பதால் அப்போது அந்த இடமாற்றத்தை எதிர்த்து மௌலவி காசிம் – ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

அவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுச் சென்ற காசிம் மௌலவி தற்போது மீண்டும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக வந்துள்ளார். அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அவர் அக்கரைப்பற்றுக்கு வருவதற்கு முன்னர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றினார். அது ஓர் இருண்ட காலமாகும். தகுதியற்ற அந்த நபருக்கு எதிராக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுபோலவே தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அக்கரைப்பற்று பிரதேசவாதிகளால் குறி வைக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் ஒருவர் வைத்திய அத்தியட்சகராக இருக்கின்றமை, அங்குள்ள பிரதேச வாதிகளின் கண்களில் தொடர்ச்சியாக உறுத்திக் கொண்டுதான் வந்தது. அவ்வப்போது டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக கடந்த காலங்களில் பிரதேச வாதிகள் சிலிர்த்துக் கொண்டு எழுந்த போதும் பெரிதாக எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது அவர்கள் தரப்பு அரசியல்வாதிக்கு அதிகாரம் கிடைத்தவுடன், டொக்டர் ஜவாஹிரை அத்தியட்சகர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு ‘கச்சை’ கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர்.

டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலுள்ள சில வைத்தியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜவாஹிருக்கு எதிரான இந்த நடவடிக்கையின் பின்னணியில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இருக்கின்றார் என, பாரியளவில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அரசியலுக்கு அட்டாளைச்சேனைப் பிரதேசம் எப்போதும் கைகொடுத்து வந்துள்ளது. அதாஉல்லாவிடமிருந்து – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரிந்து சென்ற பின்னரும், அதாஉல்லாவுக்கு அட்டாளைச்சேனையில் ஏதோ ஒரு வீதத்தில் ஆதரவு கிடைத்தே வருகிறது.

இந்தப் பின்னணியில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பிரதேச வாதம் கொண்டோரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் செயற்பட்டு வருகின்றமை ஏற்புடையதல்ல. அட்டாளைச்சேனைப் பிரதேசமும் இவற்றினை தொடர்ந்தும் மௌமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது.

எனவே, அக்கரைப்பற்று பிரதேச வாதம் கொண்டோர், டொக்டர் ஜவாஹிருக்கு எதிராகச் செய்து வரும் சூழ்சிகளுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேசம் அணி திரள வேண்டியது அவசியமாகும்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், புத்தி ஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, டொக்டர் ஜவாஹிருக்கு ஆதரவுக் கரம் நீண்ட வேண்டும்.

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் நஞ்சுப் பற்களைப் பிடுங்கியெறிவதற்காக தருணம் இதுவேயாகும்.

இதில் அக்கரைப்பற்றிலுள்ள நேர்மையான நல்லுள்ளம் கொண்டவர்களும் இணைய வேண்டும்.

அக்கரைப்பற்றில் கடமையாற்றும் ஏனைய ஊரவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று அக்கரைப்பற்றிலுள்ள பிரதேச வாதிகள் சிந்திப்பது போல், ஏனைய பிரதேசத்தவர்களும் தத்தமது ஊர்களில் முக்கிய பதவிகளிலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசத்தவர்களை அந்தப் பதவிகளிலிருந்து விரட்டியடிப்பதற்கு முடிவு செய்தால் நிலைமை மோசமாகி விடும்.

எனவே, மிக நீண்ட காலமாக தலை விரித்தாடி வரும் அக்கரைப்பற்றுப் பிரதேச வாதத்துக்கு ஒரு முடிவு கட்டி, பிரிவினைகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்க – நல்லுள்ளம் கொண்ட அனைவரும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு

தொடர்பான கட்டுரை: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை; அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்