அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அந்த வகையில் அரசறிவியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம். பாஸில், ஜப்பான் மேஜி பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணிப் பட்டத்தையும், மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.
அதன் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசறிவியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாஸில் தன்வசப்படுத்தினார்.
மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், இள வயதிலேயே கல்வித்துறையில் பல்வேறு அடைவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை கலாநிதி பாஸில் உட்பட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் 05 பேர், பேராசியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கலாநிதி எஸ்.குணபாலன், கலாநிதி ஏ.எம். றஸ்மி, கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி சப்ராஸ் நவாஸ் ஆகியோரே பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற ஏனையோர்களாவர்.