பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத்
ரி. தர்மேந்ரா
முஸ்லிம் அரசியலின் போக்கை தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தை கூடவே நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு மொட்டு கட்சியின் வியூகம் வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அபிவிருத்தி வேலை திட்டங்களுக்கான கிழக்கு மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான றிசாத் ஏ. காதர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் இன்ற திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போது அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“முஸ்லிம் அரசியலின் மூளையாகவும், மைய புள்ளியாகவும் விளங்குபவர் பஷீர் சேகு தாவூத். அதே நேரம் எமது தேசத்தின் மீதும், இந்நாட்டு மக்கள் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை கொண்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தலைவராகவும் உள்ளார்.
பெரும்பான்மை மக்களின் பேரபிமானத்தை வென்ற இவர் சிறுபான்மை மக்களை – குறிப்பாக முஸ்லிம்களை சரியாக வழி காட்டி அழைத்து செல்ல வல்ல திசைகாட்டியாகவும் இருக்கின்றார்.
சிறுபான்மை மக்களை மாத்திரம் அன்றி சிறுபான்மை மக்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் பொதுநல செயற்பட்டாளர்கள் ஆகியோரை அறியாமையில் இருந்து – அறிவை நோக்கி அழைத்து செல்ல வல்ல மீட்பராகவும் உள்ளார்.
அந்த கடமைகளில் இருந்து கடந்த காலங்களில் என்றென்றைக்குமே தவறாதவர் இவர். தேசிய அரசியலில் இருந்தும், சிறுபான்மை அரசியலில் இருந்தும், முஸ்லிம் அரசியலில் இருந்தும் எப்போதைக்குமே பிரிக்கப்பட முடியாதவராக பஷீர் சேகுதாவூத் உள்ளார்.
இன்றைய சூழலில் இவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இது நாட்டுக்கும், மக்களுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும், அரசாங்கத்துக்கும், ராஜபக்ஷகளுக்கும் பெருநன்மை பயக்கின்றதாகவும் நிச்சயம் இருக்கும்.
இதன் உண்மை தன்மையை உள்ளபடி உணர்ந்து வைத்திருக்கின்ற பசில் ராஜபக்ஷ, இவரையும் நாடாளுமன்றத்துக்கு உடன் அழைத்து செல்ல பெருவிருப்பம் கொண்டு உள்ளார் என்று நாம் அறிகின்றோம்.
அது சம்பந்தப்பட்டு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு இருப்பதாக அறிய கிடைக்கின்றது.
தமிழ் மக்கள் மூலமாக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்து, முஸ்லிம்களின் தலைவர் அஷ்ரப்பால் முஸ்லிம் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட இவர் – தற்போது நாட்டின் பெருந்தலைவர்களான ராஜபக்ஷகள் மூலமாக தேசிய அரசியலின் நன்மையும் கருதி தேசிய பட்டியல் எம். பியாக நியமிக்கப்படுதல் வேண்டும்” என்றார்.