பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

🕔 July 5, 2021

– மரைக்கார் –

ஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவராக சிறிது காலம் தன்னைக் காட்டிக் கொண்டார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே, மைத்திரியை அவ்வாறு அதாஉல்லா ஆதரித்ததாகவும் அரசியலரங்கில் ஒரு பேச்சு உள்ளது.

அதாஉல்லாவின் இந்த நடவடிக்கை காரணமாக, அவர் ‘ஒரிஜினல்’ மஹிந்த விசுவாசி எனும் அடையாளத்தை இழந்தார். மட்டுமன்றி, ராஜபக்ஷவினரிடையேயும் அவரின் செல்லாக்கு குறைவடைந்தது.

ஏமாற்றத்துடன் திரும்பிய அதாஉல்லா

இதனால்தான் தற்போது ஆளுந்தரப்புடன் அதாஉல்லா இணைந்துள்ள போதிலும், அவருக்கு ஒரு பிரதியமைச்சர் பதிவியையேனும் ராஜபக்ஷவினர் வழங்கவில்லை என்கிற பேச்சுகளும் உள்ளன.

இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, அமைச்சுப் பதவி பெறும் எடுப்புடன் அங்கு வருகை தந்திருந்தமையும், பின்னர் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாமை காரணமாக, அவர் ஏமாற்றத்துடன் திரும்பியமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலையேற்றத்தினை அடுத்து அண்மையில் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் கூறியிருந்தார்.

பசிலுக்கு எதிரான கூட்டணியுடன் கைகோர்ப்பு

இதனையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 08 சிறிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டு, உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் அதாஉல்லாவும் கையெழுத்திட்டிருந்தார்.

மேற்படி அறிக்கையில் கையெழுத்திட்ட சிறிய கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானோர், பொதுஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்றம் வருவதை கடுமையாக அவர்கள் எதிர்த்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்தே, உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக அதாஉல்லா கையெழுத்திட்டார். இதன் மூலம், பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான கூட்டணியுடன் அதாஉல்லா கைகோர்த்துள்ளதாக வெளியில் தெரியத் தொடங்கியது.

இவ்வாறான சூழ்நிலையில்தான், இவ்வாரம் தேசியப்பட்டியல் மூலமாக பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும் மிக முக்கிய அமைச்சுக்களைப் பெற்று அமைச்சராகவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு நடந்தால் பசில் ராஜபக்ஷவின் கைகளே அரசாங்கத்தினுள் இனி ஓங்கும். அவரைத் தாண்டி அரசாங்கத்தினுள் எதுவும் நடப்பதென்பது கடினமாகவே இருக்கும்.

அவ்வாறாயின், அரசாங்கத்தினுள் தனக்கு எதிராகச் செயற்பட்ட சிறு கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக பசில் ராஜபக்ஷவும் செயற்படுவார் அல்லது அவர்கள் பசில் ராஜபக்ஷவினால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் முடிவுக்கு வர முடியும்.

என்ன செய்வார்?

அவ்வாறு நடந்தால் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் அந்தஸ்து இந்த அரசாங்கத்தினுள் இன்னும் மோசமடையும் என்று அரசியலரங்கில் பேச்சுகள் எழுந்துள்ளன.

தன்னை எதிர்த்த சிறிய கட்சிகளின் தலைவர்களைப் புறக்கணிக்கும் போது அவர்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு இல்லாமல் போகும் பட்சத்தில் அதனை ஈடு செய்யும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கத்துக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ஷ வெற்றியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி அரசாங்கத்தினுள் பெறுமதியான அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்ள அவரால் முடியுமா?

அவ்வாறு நடக்காத பட்சத்தில் தனது தன்மானத்தை நிரூபிக்கும் வகையில் அவர் அதிரடி முடிவுகள் எதனையும் எடுப்பாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்