அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு

🕔 July 3, 2021

– எம்.ஏ. றமீஸ் –

கொவிட் தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகளை ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் நேற்று முன்தினம் வழங்கியது.

பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமை தாங்கினார்.

வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தவர்களுக்கு இதன்போது உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாடு தழுவிய ரீதியில் வருமானம் குறைந்த இருபதாயிரம் குடும்பத்தவர்களுக்கு பெறுமதி மிக்க உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிவாரணத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சுமார் 200 குடும்பத்தவர்களுக்கு இந்நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி, திராய்க்கேணி, சம்புநகர் மற்றும் ஆலம்குளம் போன்ற பகுதிகளில் நாளாந்த வருமானத்தினை இழந்தவர்கள், விஷேட தேவையுடையவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெற்றோரை இழந்தவர்களைக் கொண்ட – குறைந்த வருமானமுடைய குடும்பத்தவர்ளுக்கு இந்நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.மயூரன், நிறுவனத்தின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் ஏ.ஆர். அர்ஷாத், மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். தயாளன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். பகனின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் மூலம், குறைந்த வருமானமுடைய பல குடும்பங்கள் நன்மை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் மேற்படி நிறுவனத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்