ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

🕔 June 20, 2021

யணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் முழங்காலிட வைத்த படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து ராணுவத்தினரின் இந்த செயற்பாடு தொடர்பில் பல்வேற தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

இந்த நிலையிலேயே, ‘ஒரு சில ராணுவ வீரர்களின் முறையற்ற நடத்தை ராணுவத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது’ என்றும், ‘இதனையடுத்து பாதுகாப்புப் படைத் தலைவரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் உடனடியாக அவர்களின் கடமைகளில் இருந்து நேற்று மாலை நீக்கப்பட்டனர்’ எனவும் தெரிவித்து, ராணுவம் – அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் ராணுவ பொலிஸார் ஆரம்ப விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அந்தப் பகுதி ராணுவப் பொறுப்பதிகாரியும் கடமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்