விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை

🕔 June 1, 2021

நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கும் பொருட்டு இன்று விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்வாய்கிழமை காலை 569 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளாவர்.

நேற்று நள்ளிரவு விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து இன்று காலை வரை 06 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தலைவர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று காலை தரையிறங்கிய 06 விமானங்களில் 569 பயணிகள் நாட்டை வந்தடைந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகள் என்றும், இந்தத் தொகை அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மீதமுள்ள பயணிகள் பெரும்பாலும் இலங்கையர்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சிக்கித் தவித்த பின்னர் – மத்திய கிழக்கில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் தொடக்கம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை வேகமாக பரவுவதால், மே 21 முதல் 31ஆம் திகதி வரை, நாட்டில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், வியட்நாம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பயணிகள், நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் வியட்நாம் அல்லது இந்தியாவுக்குச் சென்ற எந்தவொரு பயணிகளும் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், இலங்கைக்கு வரும் பிற நாட்டுப் பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்