துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

🕔 May 21, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் முடிவு குறித்து விசாரணை நடத்த, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எவ்வாறாயினும், முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, அந்த முடிவு குறித்து பொதுஜன பெரமுன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் என அறிவிக்கப்பட்ட நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி மற்றும் ஜெயரத்ன ஹேரத் ஆகியோர் ஆதரவாக அளித்த வாக்குகள் சேர்க்கப்படவில்லை என்று பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை முறையாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் என்றும் பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இது தொடர்பில் விசாரணைக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இவ் விடயம் குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்