வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

🕔 May 19, 2021

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்குப் பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனால் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் போது உயர்ந்தபட்சம் 06 லட்சம் ரூபாவும், முழுமையான அங்கவீனம் ஏற்படும் போது உயர்ந்த பட்சம் 04 லட்சம் ரூபாவும் இழப்பீடாக வழக்கப்படும்.

ஆனாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் வேலைத்தளங்களில் இடம்பெறும் விபத்துக்கள், பல்வேறுபட்ட தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமட்ட விபத்துக்களால் பாதிக்கப்படும் போதும்; நோய்வாய்ப்படல், முதலாளிமாரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் ஏற்படும் உள ரீதியானதும் சுகாதார ரீதியானதுமான பிரச்சினைகளுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ளல், மற்றும் கொவிட் – 19 தொற்று நிலைமையால் தொழில் இழத்தல் போன்றவற்றுக்காக எந்தவொரு காப்பீடுகளும் இல்லை.

எனவே, குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் தொழில்புரியும் பணியாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, தொழில் உறவுகள் அமைச்சர் மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்