அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

🕔 April 10, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக, அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியமையை அடுத்து, மேற்படி தகவல்களைக் கோரி – இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட இந்தக் கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு;

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள் மற்றும் அவற்றை குத்தகைக்கு வழங்கி வருகின்ற முறைமை குறித்து அண்மைக்காலமாக பொதுமக்களிடையே பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு, நெற்காணிகளை குத்தகைக்கு வழங்குகின்றமை தொடர்பில் மோசடி நடைபெற்று வருவதாக அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியிருந்தமை குறித்தும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

பள்ளிவாசல் என்பது அழ்ழாஹ்வின் மாளிகை என்பதோடு, அது பொதுச் சொத்தாகவும் உள்ளது.

அந்த வகையில், பொதுச் சொத்து ஒன்று தொடர்பிலும் அதன் நடவடிக்கை குறித்தும் அறிந்து கொள்வதற்கு பொதுமக்கள் உரித்துடையவர்களாவர்.

பள்ளிவாசல் ஒன்றின் சொத்துக்கள் குறித்தோ, அல்லது அவற்றினை குத்தகை மற்றும் வாடகைக்கு வழங்குகின்றமை தொடர்பிலோ வெளிப்படைத்தன்மையற்ற முறையில் பள்ளிவாசல் நிருவாகம் செயற்பட முடியாது.

மேலும் பொதுமக்கள் பள்ளிவாசலின் தகவல்களைக் கோருவார்களாயின் அவை குறித்த விவரங்களை மூடிமறைத்தலின்றி வெளிப்படையாக வழங்க வேண்டியதும், பள்ளிவாசல் நிருவாகத்தினரின் பொறுப்பாகும்.

அதற்கிணங்க அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தொடர்பில் கீழே கோரப்பட்டுள்ள தகவல்களுக்கான எழுத்து மூல பதிலை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குரிய அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்துக்களின் விவரங்களை வழங்கவும். (பணம், வளவுகள், நெற்காணிகள், கட்டடங்கள் என வகைப்படுத்தவும்)
  2. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் கடந்த 05 வருடங்களுக்குரிய வருமானங்கள் எவ்வளவு என்பதை, ஒவ்வொரு வருடத்துக்கும் தனித்தனியாகவும் விவரமாகவும் குறிப்பிட்டு வழங்கவும்.
  3. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டால், கடந்த 05 வருடங்களாக அந்தக் காணிகள் யாருக்கு, எவ்வளவு தொகைக்கு வழங்கப்பட்டன என்கிற விவரங்களை வழங்கவும்.
  4. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குரிய நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தால், கடந்த 05 வருடங்களில் அவை ஏலத்தின் அடிப்படையிலா குத்தகைக்கு வழங்கப்பட்டன என்பதையும், ஏலத்தில் வழங்கப்பட்டிருந்தால் ஏலம் அறிவிக்கப்பட்ட மற்றும் ஏலம் விடப்பட்ட திகதிகளையும் ஆண்டு வாரியாக வழங்கவும்.
  5. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு போகவும் கிடைத்த சக்காத் வருமானம் எவ்வளவு என்கிற விவரங்களை ஆண்டு வாரியாக வழங்கவும்.
  6. அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் கடந்த 05 வருடங்களுக்குரிய செலவுகளை ஆண்டு வாரியாகவும், செலவிடப்பட்ட விவரங்களை விலாவாரியாகவும் குறிப்பிட்டு வழங்கவும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

Comments