அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது

🕔 April 2, 2021

டிப்படைவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரசேத்தில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடந்த நொவம்பர் 21ஆம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 06 பேர் அடங்கிய குழுவின் மிகுதி இருவர் என அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

இவர்கள் திஹாரி மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கட்டாரில் இருந்து ‘வண் உம்மா’ (one Ummah) என்ற வட்ஸப் குழு ஒன்றை நிறுவி, அதன் ஊடாக அடிப்படைவாதக் கருத்துக்கள் மற்றும் போதனை காணொளிகளை வெளியிட்டுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களின் பொதுவான கருத்துக்கு முரணான வகையில் மாற்றுக்கருத்தியலை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை இந்த வட்ஸப் குழுவின் ஊடாக இவர்கள் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னதாக ஸஹ்ரான் வெளியிட்ட இறுதி காணொளி மற்றும் குரல் பதிவுகளை இவர்கள் ‘வண் உம்மா’ வட்ஸப் குழுவின் ஊடாக பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அவ்வாறே கட்டாரிலிருந்து ஐ.எஸ் கருத்துகளை பரப்பியுள்ளதாகவும் அதனால் இவர்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இக்குழுவவைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் நால்வரும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வைத்து பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க உத்தரவு பெற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்