நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

🕔 March 5, 2021

– மப்றூக் –

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் இலங்கையில் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியிலுள்ள சூடுபத்தின சேனை எனும் இடத்திலுள்ள அரச காணியில் முஸ்லிம்கள் இருவரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌபர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே மையவாடியாக ஒதுக்கப்பட்டிருந்த 10 ஏக்கர் காணியில், கொவிட் காரணமாக மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 03 ஏக்கர் நிலத்தை அடையாளப்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தவிசளார் நௌபர் கூறினார்.

கடந்த நொவம்பர் மாதத்திலேயே – இவ்வாறு கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு மேற்படி இடத்தை தாம் அடையாளப்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்னும் மூன்று உடல்கள் இன்று அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன எனவும் அவர் கூறினார்.

உடல்களை அடக்கம் செய்யும் பகுதியில் சுகாதார அதிகாரிகள், ராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபையினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் சமூகமளித்திருந்ததாக தவிசாளர் நௌபர் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை வரை 489 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 330க்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் ஒரு சில உடல்கள் தவிர ஏனைய உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் தகனம் செய்வதற்கு நீதிமன்றின் ஊடாக எதிர்ப்பை வெளியிட்ட முஸ்லிம்கள் சிலரின் உடல்கள் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் கடந்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.

அன்றிலிருந்து இதுவரை இலங்கையில் கொரோனாவினால் மரணமான அனைவரும் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி – கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி இருந்தது.

ஆயினும், அந்த உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

இதனையடுத்து இதற்கு இரணைதீவு மக்களும் ஏனைய பல தரப்பினரும் இதற்கு கடும் எதிர்பை வெளியிட்டனர்.

இந்த நிலையிலேயே, இன்றைய தினம் ஓட்டமாவடியில் முதலாவதாக கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Comments