எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு

🕔 February 18, 2021

தான் உட்பட நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அரசியல் பழிவாங்கும் நோக்கோடு செய்யப்படுகின்ற மிக மோசமானதொரு நடவடிக்கை இந்த அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பா நான் உட்பட இன்னும் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமையைப் பறிப்பதற்கான ஒரு முயற்சி நடைபெறுகிறது.

‘அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு’வின் அறிக்கையோடு சம்பந்தப்படுத்தி இதனைச் செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே ஜனவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையின் மூலமாக – இந்த அரசாங்கம் தங்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசியல் தலைவர்களை மௌனிக்கச் செய்வதற்கும் அவர்களுடைய எதிர்ப்பை சமாளிப்பதற்கும் இவ்வாறு மிக மோசமாக, நீதி நியாயமற்ற முறையில் செயல்படுகிறது.

இதன் மூலம் தங்களுக்கு மேலே சேற்றை வாரிப் பூசிக் கொள்வதற்கான முயற்சியில் ஆட்சியாளர்கள் இறங்குவார்களாக இருந்தால், இதற்கு எதிராக நாங்கள் ஒன்று திரண்டு போராட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாக எடுப்பதற்கு நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக சட்டத்துறையின் சுயாதீனம் மட்டுமல்ல, சட்டமா அதிபர் திணைக்களத்தினுடைய நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இந்த நிறுவனங்கள் துணை போகாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் சட்டபூர்வமாக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைக்கும் முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதேநேரம் நீதிக்குப் புறம்பான வகையில், மிக மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அரசாங்கத்தை எதிர்த்து, நாங்கள் மக்கள் மத்தியிலிருந்து போராடுவதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Comments