119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

🕔 January 7, 2021

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் கண்டியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக பொலிஸாரை நேற்று முன்தினம் (05ஆம் திகதி) தொடர்பு கொண்டுள்ளார்.

பொலிஸாரை தவறாக வழிநடத்தும் பொருட்டு, மேற்படி நபர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலும் ஈரானிலும் நீண்டகாலமாக வசித்து வந்த இவர், அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.

119 அவசர தொலைபேசி சேவையின் ஊடாக, பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கி, பிழையாக வழிநடத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, பொதுமக்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments