பேஸ்புக்கில் ‘போட்டோ’ பகிர்ந்ததால் வந்த வினை; சாய்ந்தமருது வர்த்தக நிலையத்துக்கு பூட்டு: ஊழியர்கள் தனிமையில்

🕔 January 6, 2021

– அஸ்லம் எஸ். மௌலானா –

சாய்ந்தமருது பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) அதன் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பேணாமல் கூட்டாக நின்று, ‘செல்ஃபி’ எடுத்து, அதனை ‘பேஸ்புக்’ இல் பதிவிட்டிருந்தனர். இவ்விடயம் சுகாதாரத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, மேலதிகாரிகளின் பணிப்புரையின் பேரில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

இவர்களது இச்செயற்பாடு சுகாதார நடைமுறைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு சட்டத்தை மீறும் வகையிலும் அமைந்திருந்தமையினால் அச்சட்டத்தின் கீழ், குறித்த வர்த்தக நிலையத்தை 14 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதுடன் 04 ஊழியர்களையும் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் கொரோனா தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் எமது சுகாதாரப்பிரிவினால் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

Comments