சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

🕔 January 6, 2021

– அஹமட் –

சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று எடுத்த படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து, குறித்த நிறுவனத்தை சுகாதாரத் தரப்பினர் மூடி சீல் வைத்துள்ளதோடு, குறிப்பிட்ட ஊழியர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகய்யா லதாகரனும் அவரின் சக ஊழியர்களும் முகக் கவசமின்றி நெருக்கமாக இருக்கும் சில படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

லதாகரனின் பிறந்த நாளன்று எடுக்கப்பட்டதாக நம்பப்படும் குறித்த படங்களில், அவருக்கு சக ஊழியர்கள் முகக் கவசமின்றி இனிப்பு ஊட்டி விடுவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இரண்டு நிகழ்வுகளையும் படங்களையும் குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளதோடு, கேள்விகளையும் முன்வைத்துள்ளனர்.

சாய்ந்தமருது வர்த்தக நிறுவத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் ஒரு சட்டமென்றால், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு இன்னொரு சட்டமா? என சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தமது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாய்ந்தமருது வர்த்தக நிறுவனம் மீதும் அதன் ஊழியர்கள் மீது பாய்ந்துள்ள கொவிட் சுகாதார நடைமுறைச் சட்டம், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன் மீதும், அவரின் சக ஊழியர்கள் மீதும் ஏன் பாயவில்லை எனவும் மக்கள் கேட்கின்றனர்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை கடுமையாக மேற்கொள்வதையும், அதிகாரிகள் விடயத்தில் அதே சட்டம் வாலைச்சுருட்டிக் கொண்டு கிடப்பதையும் காணும் போது, சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்பதை, அரச அதிகாரிகள் மனதிற் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் கருத்திடுவோர் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்