கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

🕔 December 14, 2020

லங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொவிட் – 19 பாதிப்பினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவகின்றமை குறித்து முஸ்லிம்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றமையினை அடுத்து மாலைதீவு அரசு இவ்வாறு முன்வந்துள்ளது.

மரணமடைகின்றவர்களை தகனம் செய்வது தமது மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றது.

மாலைதீவு அரசு உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு இதனைத் தெரிவித்துள்ளதாகவும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், விரைவில் ஒரு பதிலை அனுப்பும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்கி, அத்தகைய கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு சுகாதார அமைச்சுக்கு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹெரத் கூறியுள்ளார்.

மாலைதீவில் பல தீவுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய டொக்டர் ஹெரத்; கோவிட் பாதிப்பு காரணமாக மரணமானவர்களை அடக்கம் செய்வதில், இலங்கையைப் போன்று எந்தவொரு பிரச்சினையையும் அந்த நாடு எதிர்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

கொவிட் 19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஒரு தீவை ஒதுக்க மாலைதீவு அரசு முன்மொழிந்துள்ளது. இதனால் சுகாதார அமைச்சு அத்தகைய செயல்முறையின் நடைமுறை குறித்து ஆராயும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைவடைந்த பின்னர், இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் 19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இலங்கைக்குள் குறைந்த நீர்மட்டம் கொண்ட நிலத்தை தேடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் சுகாதார நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தற்போது கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு, உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையில், பிரேத அடைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்களையும் தகனம் செய்யும் நடைமுறையை இலங்கை பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்