90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது

🕔 December 8, 2020

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் கூறுகையில்; “கொவிட்ட 19க்கு எதிரான மருந்தை பெற்றுக் கொள்ளும் முதலாவது நபர் என்பதில் நான் பாக்கியம் பெற்றவாக கருதுகிறேன். இது எனக்கான முன்கூட்டி பிறந்த நாள் பரிசு” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.

பைசர் நிறுவனத்தின் கொவிட் 19க்கு எதிரான தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்ட உலகின் முதலாவது நபராகவும் மேற்படி மூதாட்டி இடம்பிடித்துள்ளார்.

Comments