பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு

🕔 November 17, 2020

பிச்சை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிச்சை பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் – நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் நடவடிக்கை காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் யாசகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, அவர்களை வழிநடத்தும் பிரதான நபர்களையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு, ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் யாசகம் வழங்குகின்றமையினாலேயே, யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், பிரதானமாக வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் ஓட்டுநர்களோ, வாகனத்தில் பயணிப்போரோ யாசகம் வழங்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

யாசகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், போலி முகத்துடன் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்