20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

🕔 November 1, 2020

– புதிது செய்தியாளர் –

“எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும் தெரிவித்துள்ளார்.

‘நியூஸ் பெர்ஸ்ட்’ அலைவரிசையின் ‘நியூஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

“முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு அவசியமில்லை என்று, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நீங்கள் இதே நிகழ்ச்சியில் கூறிருந்தீர்கள். ஆனால் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தவிர்ந்த – ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். பார்க்கப்போனால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவோடுதான் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்” என, நீதியமைச்சர் அலிசப்றியிடம், நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் கேட்ட போதே, மேற்கண்ட பதிலை அவர் வழங்கினார்.

இது தொடர்பில் அமைச்சர் அலிசப்றி மேலும் தெரிவிக்கையில்; “முஸ்லிம் கட்சிகள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் போயிருந்தாலும், 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துத்தான் இருக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயான மற்றும் அரவிந்த குமார் ஆகியோரின் ஆதவுடன் எமக்கு 150 எனும் எண்ணிக்கையிலான ஆதரவு கிடைத்திருக்கும்” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, “தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக சில தரப்புகள் கூறுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்டால், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா” என, அமைச்சரிடம் வினவப்பட்ட போது; “தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான எவ்வித யோசனையும் எமக்கு இல்லை. நாடாளுமன்றில் எமக்கு போதுமான ஆதரவு உள்ளது” என்றும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

Comments