தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே, 20க்கு ஆதரவாக வாக்களித்தோம்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிப்பு

🕔 October 23, 2020

– சர்ஜுன் லாபீர் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய விருப்பத்தினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்ற பின்னரே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்துக்கான வாக்களிப்பு நடைபெற்ற பின்னர், முகநூல் பக்கமொன்றுக்கு பேட்டியளித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

“உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் ஆதரவாகவும் வாக்களிக்கலாம், எதிராகவும் வாக்களிக்கலாம். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அந்த உரிமையை தருகின்றேன். ஆதரவாக வாக்களிப்பவர்கள் கட்சியினதோ, தலைவரினதோ கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்படமாட்டாது” என, மு.காங்கிரஸ் தலைவர் தமக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் இந்த பேட்டியில் ஹரீஸ் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பாக அந்தப் பேட்டியில் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்;

“தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு இன்று வந்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு ஒரு தந்திரோபாய புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தோம்.

கட்சியின் உச்சபீடம் கூடி 20வது சீர்திருத்த சட்டமூலம் சம்மந்தமாக விவாதித்து இருந்தோம். உச்ச பீட உறுப்பினர்களில் சிலர் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். சிலர் இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஈற்றிலே கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுவும் கூடி 20வது திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் புதிய திருத்தங்களும் வருகின்ற படியினால், அதை ஒப்பீடு செய்து கட்சியின் நாடாளுமன்ற குழு அதனை தீர்மானிக்க முடியும் என்ற அங்கீகாரத்தினை கட்சியின் உச்சபீடம் கடந்த வாரம் வழங்கி இருந்தது.

முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியோ, கட்சியின் தலைவரின் கட்டளையை மீறியோ நாங்கள் வாக்களிக்கவில்லை” என்றார்.

Comments