பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்?

🕔 October 8, 2020

மொனராகல – கும்புகன பிரதேசத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் கைப்பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையின் உரியாளர் தொடர்பில், விசாரணைகளின் போது தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றினை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட நால்வரை, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, சந்தேகநபர்கள் வசமிருந்த 02 அங்குல உயரமான, மிக பழைமை வாய்ந்த நீல மாணிக்கக்கல்லில் செய்யப்பட்ட புத்தர் சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மொனராகலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேகநபர்களும் புத்தர் சிலையை விற்பனை செய்யும் இடை தரகர்களாகவே செயற்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், குறித்த சிலையின் உரிமையாளர் தொடர்பிலான சில தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், விசாரணைகளின் நிமிர்த்தம் அந்த தகவல்களை வெளியிட பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சிலை தொடர்பிலான தொல்பொருள் திணைக்களம், மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஆகியவற்றின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிக்கைகள் கிடைத்தவுடன், குறித்த சிலை எவ்வளவு பழைமை வாய்ந்தது மற்றும் எவ்வளவு பெறுமதியானது என்பது தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.

Comments