ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 7, 2020
மகன் சியான்

ரே மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனைக்கான கட்டணத் தொகையை திரட்டிக் கொண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டது.

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

சுனாமியில் தொலைந்த தனது மகன் மீண்டும் கிடைத்துள்ளதாகக் கூறும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா, அவரின் முன்னாள் கணவர் ரசீட் மற்றும் அதே மகனுக்கு தான்தான் தாய் எனக் கூறும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான், அவரின் முன்னாள் கணவர் அமீர் ஆகியோரும் சர்ச்சைக்குரிய மகனும் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகினர்.

நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சர்ச்சைக்குரிய மகன் – யாருடைய பிள்ளை என்பதைக் கண்டறியும் பொருட்டு மரபணுப் பரிசோதனை (டி.என்.ஏ) மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான செலவினை இரண்டு தரப்பும் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.

ஆயினும் மரபணு பரிசோதனைக்காக செலவிடுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் – தான் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதாகவும் நூறுல் இன்ஷானின் கணவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து உரிய பணத்தைத் திரட்டிக் கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்கிய நீதவான், சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் நவம்பர் 24ஆம் தேதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு செல்ல வேண்டியுள்ளதால், இதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரின் போக்குவரத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்பதாக ஹமாலியாவின் முன்னாள் கணவர் ரசீட் இன்று நீதிமன்றில் கூறினார்.

இதேவேளை, நீதிமன்றுக்கு வெளிவில் சர்ச்சைக்குரிய மகன் சியான் என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில்; மரபணு பரிசோதனை முடிவு எவ்வாறு அமைந்தாலும், எப்போதும் போல் – நூறுல் இன்ஷான் எனும் தாயின் வீட்டிலேயே தான் தொடர்ந்தும் வாழப்போவதாகத் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது 05 வயதில் காணாமல் போன தன்னுடைய மகன், 21 வயது இளைஞனாக செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்துள்ளார் என, அம்பாறை மாவட்டம் – மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா என்பவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததோடு, கிராமசேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

நூறுல் இன்ஷான்

இதனையடுத்து, குறித்த பையனுக்கு தான்தான் தாய் என்றும், தனது மகன் பிறந்ததில் இருந்து தன்னுடனேயே வளர்ந்து வருவதாகவும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான் என்பவரும் உரிமை கோரினார். மட்டுமன்றி, தனது மகனை ஹமாலியா என்பவரிடமிருந்து மீட்டுத் தருமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செப்படம்பர் 30ஆம் தேதி முறைப்பாடு ஒன்றினையும் அவர் பதிவு செய்திருந்தார்.

இதற்கிணங்க சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் இவ்விடயம் தொடர்பில் வழக்கு ஒன்றினை பொலிஸார் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சர்ச்சைக்குரிய மகனை உரிமை கோரும் தாய்மார்களான ஹமாலியா மற்றும் நூறுல் இன்ஷான் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். சர்சைக்குரிய மகன் – இதுவரையில் தன்னை வளர்த்து வந்த தாய் – நூறுல் இன்ஷான் என்பவருடன் இணைந்து நீதிமன்றில் முன்னிலையானார்.

குறித்த மகனுக்கு அக்ரம் றிஸ்கான் என – தான் பெயர் வைத்ததாக ஹமாலியா கூறும் அதேவேளை, தனது மகனின் பெயர் முகம்மட் சியாம் என்கிறார் நூறுல் இன்ஷான்.

இந்த வழக்கை விசாரித்த நீதவான்; குறித்த பையன் யாருடைய மகன் என்பதைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தார்.

எனவே, இரண்டு தாய்மார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மகன் ஆகியோருடன், இரண்டு தாய்மாரின் கணவர்களையும் இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் திங்கட்கிழமையன்று நீதவான் உத்தரவிட்டார்.

நூறுல் இன்ஷானின் முன்னாள் கணவர்

மேற்படி இரண்டு தாய்மாரின் கணவர்களும் அவர்களிடமிருந்து சட்டப்படி பிரிந்து வாழ்வதாக இதன்போது மன்றில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும், நூறுல் இன்ஷானின் முன்னாள் கணவர் அமீர் என்பவர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையிலேயே, நீதவானின் உத்தரவுக்கிணங்க இந்த வழக்குடன் தொடர்புபட்ட அனைவரும் இன்று புதன்கிழமை ஆஜராகியிருந்தனர்.

நன்றி: பிபிசி தமிழ்

தொடர்பான செய்தி: ஒரு மகனுக்கு உரிமை கோரும் இரு பெண்கள்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்