தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில்

🕔 August 28, 2020

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 16ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக செப்டம்பர் 17ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இவ்விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்