அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம்

🕔 August 5, 2020

– அஹமட் –

தேர்தல் நடவடிக்கைகளில் மதஸ்தலங்கள் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை – கோணாவத்தை 08 ஆம் பிரிவிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் அறிவித்தல்களை வழங்க வேண்டாம் என, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் வன்முனைகளை கண்காணிக்கும் பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பாளர், நேற்றைய தினம் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருக்கு அறுவுறுத்தியிருந்த நிலையிலேயே, மேற்படி பள்ளிவாசல் இவ்வாறு தேர்தல் சட்ட அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு ஜும்ஆ பள்ளிவாசலின் ஒலிபெருக்கியில் இவ்வாறு தேர்தல் வாக்களிப்பு குறித்து அறிவித்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் வன்முனைகளை கண்காணிக்கும் பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பாளரிடம், ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது; இந்த நடவடிக்கை தேர்தல் சட்ட அத்து மீறல் எனத் தெரிவித்ததோடு, இது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்தார்.

சில பள்ளிவாசல்களின் நிருவாகத் தலைவர்கள், அரசியல் கட்சிகளில் பிரதேச ரீதியாக முக்கிய பதவிகளை வகித்துக் கொண்டு, அந்தக் கட்சிகளுக்குச் சார்பாக தமது நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களை வழி நடத்தி வருகின்றமை குறப்பிடத்தக்கது.

பள்ளிவாசலில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

Comments