தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம்

🕔 July 22, 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவர், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினியுடன் ஒரே வாகனத்தில் பயணித்ததை நேரில் கண்ட சாட்சியாளரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது.

புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் என்பவர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணை அதிகாரியான பிரதம பொலிஸ் பரிசோதகர் அர்ஜுனா மஹில்கந்தவிடம் சாரா சம்பந்தமாக அண்மையில் வெளிவந்த கருத்து குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு வினவியது.

அதன்போது சாரா ஜஸ்மின் தொடர்பான விடயங்கள் வெளிவந்தன.

அந்த நபரின் சாட்சியத்தின்படி; சாரா ஜஸ்மின் மேலும் இரண்டு பேருடன் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பீச் ரோட்டுக்குள் பிரவேசித்ததை கண்டதாக கூறினார்.

வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பட்டர் நிற ஜீப் வண்டியின் பின் இருக்கையில் தனக்குத் தெரிந்த மற்றொரு நபர் வாகனத்தின் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பதை அவர் கண்டதாக சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தவரும் அண்மையில் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டவருமான அபூபக்கர் என அடையாளம் கண்டுகொண்டதாக நேரில் கண்ட சாட்சியாளர் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் சம்பவத்தை நேரில் கண்ட நபர் தனது வாகனத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரியுடன் பேசுவதற்காக இறங்கிய போது அந்த வாகனம் மட்டக்களப்பு நோக்கி வேகமாகச் சென்றதாகவும் கூறினார்.

சாரா ஜஸ்மின் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி செல்ல உதவிய இருவர் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக அந்த விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சாரா ஜஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அவரது தாயின் சகோதரியின் கணவர் மற்றும் அவரின் சகோதரர் உதவினார்கள் என்பதையும் குறித்த சாட்சியாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கூறினார்.

பிரதம பொலிஸ் அதிகாரியான மேற்படி அபூபக்கர் என்பவர், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவராவார்.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

Comments