திசைகாட்டிகளின் முட்கள்

🕔 July 7, 2020

– முகம்மது தம்பி மரைக்கார்

முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்” என்று மகாத்மா காந்தி ஆசைப்பட்டார். 

ஒருநாள் ஆட்சியாளர் உமர் – மேடையில் ஏறிநின்று, ”நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக்கூறி உரையாற்ற ஆரம்பித்தார். உடனே அங்கிருந்த சல்மான் அல் பாரிஸி எழுந்து நின்று; ”நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. திருப்தியான பதிலை நீங்கள் கூறும் வரை, உங்கள் பேச்சை நாங்கள் கேட்கப் போவதில்லை” என்றார். உடனே உமர், கேள்வியைக் கேட்க அனுமதித்தார்.

”பைதுல் மால்”இல் (அரச கஜானா) இருந்து எல்லோருக்கும் வழங்கப்பட்ட துணியின் அளவுதான் உங்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், உங்கள் உயரத்துக்கு ஆடை தைக்க அந்தத் துணி போதாது. இருந்தபோதும் நீங்கள் அணிந்திருக்கும் முழு நீள ஆடையைத் தைக்க, உங்களுக்கு துணி எங்கிருந்து கிடைத்தது” என்று கேட்டார் சல்மான் அல் பாரிஸி.

உமர் (ரலி) எதுவும் பேசவில்லை. அங்கிருந்த தனது மகன் அப்துல்லாவை நோக்கினார். தனது தந்தையின் சார்பில் பதில் சொல்வதற்காக அப்துல்லா எழுந்தார். ”நீங்கள் கூறியது போல், ‘பைத்துல் மால்’இல் இருந்து கிடைத்த துணி, எனது தந்தைக்கு ஆடை தைக்கப் போதாதுதான். அதனால், எனக்குக் கிடைத்த துணியை அவருக்குக் கொடுத்தேன். அவற்றைக் கொண்டுதான் எனது தந்தை தனக்கான ஆடையைத் தைத்துக் கொண்டார்” என்றார் அப்துல்லா.

அப்போது சல்மான் அல் பாரிஸி; ”இப்போது நீங்கள் உரையாற்றுங்கள், நாங்கள் கேட்கிறோம்” என்றார்.

கேள்வி கேட்கும் உரிமை

இந்த சம்பவம் நமக்கு ஏராளமான விடயங்களைக் கற்றுத் தருகின்றன. ஓர் ஆட்சியாளரிடம் கேள்வி கேட்பதற்கு மக்களுக்குள்ள உரிமை குறித்தும், மக்களின் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டியதன் கடப்பாடு பற்றியும் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும், அரச சொத்துக்களை தமது தேவைக்கு ஏற்றவாறு ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதையும் இந்த சம்வம் நமக்குக் கூறுகிறது.

ஆனால் இப்போதுள்ள நமது தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதை நாம் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அதேவேளை, தேர்தல்களில் எவ்வாறானவர்களை தமது பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கணிசமானோர் தாம் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசையில், கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசியபோது ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அதில் அவர்; “இந்தத் தேர்தலில் செலவு செய்ய 05 கோடி ரூபாய் பணம் தேவை” எனக் கூறுகின்றார். மேலும், கடந்த காலத்தில் அவர் போட்டியிட்ட பிரதேச சபைத் தேர்தலில் 1091 வாக்குகளைப் பெறுவதற்காக 58.5 லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டதாகவும் விவரிக்கின்றார். அதேவேளை கஞ்சா, அபின், சாராயம் போன்றவற்றினைக் கொடுத்தே வாக்குகளை தான் பெற்றுக் கொண்டதாகவும் அந்தக் குரல் பதிவில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலொன்றில் போட்டியிடும் ஒருவர், 05 கோடி ரூபாவை செலவிடுகின்றார் என்றால், அந்தப் பணம் அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்கிற கேள்வி முக்கியமானதாகும். ஆனால், மக்கள் அந்தக் கேள்வியை சம்பந்தப்பட்டவரிடம் கேட்பதில்லை. கேட்டாலும் உண்மையான பதிலை வேட்பாளர்கள் சொல்லவும் மாட்டார்கள்.

நமக்கு தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பட்டியலிட்டுப் பார்த்தால், அவர்களில் மிக அதிகமானோர் நாடாளுமன்றம் நுழைவதற்கு முந்தைய நாள் வரை, வாழ்க்கை முறையில் நடுத்தர வர்க்கத்தினராகவே இருந்திருப்பார்கள். ஆனால், 05 வருட நாடாளுமன்ற ஆட்சிக் காலத்தின் பின்னர், அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பார்கள். ஆனாலும், அவர்கள் எப்படி கோடீஸ்வரர்களாக மாறினார்கள் என்பது குறித்து மக்களில் பெரும்பாலானோர் கேள்வியெழுப்புவதில்லை.

படித்தவர்களின் தோல்வி

தேர்தலில் ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு இப்போது மிகப் பெரியதாகும். பணத்தை ‘அள்வி வீசுகின்றவர்கள்’தான் தேர்தலில் வெற்றியை இலகுவில் அடைந்து கொள்கின்றனர். அதிக பணம் செலவிடுகின்றவர்கள்தான் தேர்தலில் வெற்றியடைவார்கள் என்று மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், தேர்தல்களில் பெருமளவு பணத்தை செலவிடாத அல்லது செலவிட முடியாத படித்த – பண்புள்ள வேட்பாளர்களை மக்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர். எல்லாத் தகைமைகளும் இருந்தும், பணம் செலவிடவில்லை என்பதற்காகவே கல்விமான்களும், நற்பண்புடையோரும் தேர்தல்களில் தோற்றுப் போய்விடுகின்றனர். இது – கசப்பான உண்மையாகும்.

இந்த நிலைவரம் மாற்றப்பட வேண்டும். தேர்தல்களில் தமது பிரதிநிதிகளை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பது குறித்து, மக்களை சிவில் அமைப்புக்கள் நெறிப்படுத்த வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகைமை மற்றும் பண்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் மனப்பான்மையை மக்களிடம், சிவில் அமைப்புகள் வளர்த்து விட வேண்டும்.

ஆனால், நம்மிடையே உள்ள சிவில் அமைப்புகளில் கணிசமானவை இதனைச் செய்யத் தவறி விடுகின்றன. இன்னும் சொன்னால், அதிகாரமுள்ள அரசியல்வாதிகளின் பின்னால் ‘இழுபடுகின்ற’வையாகவே, சிவில் அமைப்புக்களில் கணிசமானவை உள்ளன. இதன் காரணமாக மக்களும் பிழையாக வழிநடத்தப்படும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அட்டாளைச்சேனையில் பாரபட்சம்

இது இவ்வாறிருக்க சமய வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், சமய ஸ்தலங்களின் நிருவாகத்தினர் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் சட்ட விரோதமான செயற்பாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பள்ளிவாசல் நிருவாகத்தினர் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது என, வக்பு சபை உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பொன்றில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நிருவாகத்தினர் கலந்து கொண்டதோடு, நஸீருக்கு வாக்களிக்க வேண்டும் எனும் தீர்மானத்துக்கு ஆதரவாக தலையசைத்துள்ளதாக தெரியவருகிறது.

மட்டுமன்றி, அந்தக் கூட்டத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும், தான் விரும்புகின்ற இரண்டு வேட்பாளர்களுக்கு மட்டும் – விருப்பு வாக்குகளை வழங்குமாறு, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன நிருவாகிகளிடம், வேட்பாளர் நஸீர் அந்தச் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

வேட்பாளர் நஸீருக்கும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன நிருவாகிகளுக்கும் இடையிலான மேற்படி சந்திப்பு – ‘பேஸ்புக்’இல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் சொந்த ஊர் அட்டாளைச்சேனை. அந்தப் பிரதேசத்தில் நஸீர் தவிர மேலும் மூன்று பேர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகள் சார்பாக போட்டியிடுகின்றனர்.

அவ்வாறு மற்றைய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்; அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் மேற்படி செயற்பாடு குறித்து தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

”அட்டாளைச்சேனையில் நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டிடுகின்ற நிலையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவசால்கள் சம்மேளனம் நடுநிலையாக நடந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வேட்பாளருக்கு மட்டும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்கது. அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பக்கச் சார்பான இந்த செயற்பாட்டை ஊர் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நிருவாகத்திலுள்ளோர் தமது சுயநலன்களுக்காக, தமக்கு விருப்பப்பட்ட ஒரு வேட்பாளரின் பின்னால் செல்வதையும், அதன்பொருட்டு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பெயரைப் பயன்படுத்துவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று, நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றவரும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவருமான பளீல் பி.ஏ. தெரிவிக்கின்றார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை என்பவரும், இவ்விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ”பள்ளிவாசல் நிருவாகத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வக்பு சபை அறிவித்துள்ள நிலையில், அதற்கு மாற்றமாக அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேனளம், வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக நடந்துள்ளது. இந்த பாரபட்சமான செயற்பாடு குறித்து அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரிடம் எனது ஆட்சேபனையினையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளேன். மேலும், இது குறித்து வக்பு சபைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஆதாரங்களுடன் முறையிடவுள்ளேன்” என்று ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை கூறியுள்ளார்.

தேர்தல்களின் போது சிறந்த தீர்மானங்களை எடுக்கத்தக்கவர்களாக, மக்களை அறிவூட்டும் செயற்பாடுகளைத்தான், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் போன்ற சிவில் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, தமக்கு விருப்பமான வேட்பாளர்களை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினர் ஆதரித்துக் கொண்டு, அந்த வேட்பாளர்களுக்கு மக்களை வாக்களிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்தல் கூடாது.

மக்களின் சுதந்திரம்

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழுமையாக சுதந்திரம் ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. அந்த உரிமையில் மேற்படி அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளம் போன்ற சிவில் அமைப்புகள் தமது மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது.

பள்ளிவாசல் நிருவாகத்தினர் நேர்மையானவர்களாகவும், தத்தமது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சிந்தித்து தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் இருப்பார்களாயின், அவர்களின் வழிகாட்டல்களை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், நிலைமை அவ்வாறில்லை என்பதுதான் உண்மை நிலைவரமாகும்.

எனவே, திசை காட்டிகளின் முட்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியான பாதைகளின் பக்கம் திரும்புவதில்லை என்பதையும், மக்கள் மனதில் வைக்துக் கொள்தல் அவசியமாகும்.

பொருத்தமானவர்கள்

நாடாளுமன்றம் என்பது சட்டவாக்க சபையாகும். ஒரு நாட்டை பரிபாலிப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றில்தான் உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். எனவே, சட்டங்கள் உருவாக்கப்படும் போது, அவற்றிலுள்ள நல்லவை, தீயவற்றை விளங்கிக் கொண்டு அவை தொடர்பில் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தகைமை கொண்டவர்களாக, நாம் தெரிவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

எனவே படித்த நேர்மையாளர்களை தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதுதான் மக்களுக்கு நலவாக அமையும்.

தேர்தல்களில் நற்பண்புகளைக் கொண்ட கல்வியாளர்களை – ஒரு சமூகம் அலட்சியம் செய்யுமாயின், அந்த சமூகம் – மோசமானவர்களால் ஆளப்படும் என்பதை மறக்காமல், நமது வாக்குகளைப் பயன்டுத்திக் கொள்தல் வேண்டும்.

நன்றி: தமிழ் மிரர் (07 ஜுலை 2020)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்