2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

🕔 June 18, 2020

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் காணப்படுவதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக  பதவிவகித்த மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இறுதி போட்டியில் விளையாட்டுதுறை அமைச்சரினதும், கிரிக்கட் கட்டுபாட்டு சபையினதும் அனுமதியினை பெற்றுக்கொள்ளாமல் நால்வரை தொடரில் விளையாட வைத்தமை அதில் ஒன்றாகும்.

அதனை நான் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவதானித்தேன்.

இது தொடர்பில் பொறுப்புவாய்ந்த தரப்பிற்கு என்னிடம் காணப்பட்ட சான்றுகளையும் சாட்சியங்களையும் வழங்கியுள்ளேன். ஆனால் குறிப்பிடாத பல சான்றுகளும் சாட்சியங்களும்  தன்னிடம் காணப்படுகின்றன.

ஆனால் இந்த விட்டுக்கொடுப்புடன் கிரிக்கட் வீரர்கள் தொடர்புபடவில்லை என்றும் கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச ஒரு நாள் உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

இதன்போது நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்து களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில்0 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

Comments