சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

🕔 October 29, 2015

Naseer - 0987
– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த அமைச்சினை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டதாக, கிழக்கு மாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை உடனடியாகப் பொறுப்பேற்றுகுமாறு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தன்னைப் பணித்தமைக்கிணங்கவே, குறித்த அமைச்சுப் பொறுப்பினை தான் கையேற்க நேர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசினூடாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை மு.கா. தலைவர் வழங்குவார் என்கின்ற எதிர்பார்ப்பொன்று இருந்த நிலையில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசும்போதே, புதிய மாகாண சுகாதார அமைச்சர் நசீர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“மு.காங்கிரசினூடாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமொன்று அட்டாளைச்சேனைக்கு கிடைக்கும் என்று மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். எனது எதிர்பார்ப்பும் அதுவேதான். ஆனால், அதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினை பொறுப்பேற்கும்படி கட்சித் தலைவர் என்னைப் பணித்தார். தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு அமைச்சினை பொறுப்பேற்றுள்ளேன்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக மு.காங்கிரசைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் பதவி வகித்தார். ஆனால், அவர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டதால், அந்த அமைச்சுப் பொறுப்பு காலியாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்ட ஏனைய கட்சிக்காரர்கள் கிழக்கு மாகாண அமைச்சுப் பொறுப்பினை கைப்பற்றிக் கொள்ளும் எத்தனத்தில் ஈடுட்டனர். இதனை அறிந்து கொண்டமையினால்தான், குறித்த அமைச்சுப் பொறுப்பை உடனடியாகக் கையேற்குமாறு தலைவர் ரஊப் ஹக்கீம் என்னைப் பணித்தார்.

ஆனாலும், அட்டாளைச்சேனைக்கு எதிர்பார்க்கப்படும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் கிடைக்கும். மு.கா.விடமுள்ள இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களின் பதவிக் காலங்கள் பிரிக்கப்பட்டு, நான்கு பேருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில், அதில் ஒரு காலப் பகுதிக்கானது அட்டாளைச்சேனைக்கு நிச்சயம் வழங்கப்படும்.

இன்னொருபுறம், கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தலைவர் சில முடிவுகளை எடுக்கும் போது, அதற்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டி இருக்கிறது. கட்சி இருந்தால்தான் அதனூடாக கிடைக்கும் ஏனையவற்றினை நாம் அனுபவிக்க முடியும்.

திங்கட்கிழமை காலையில்தான் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் படி தலைவர் அறிவித்தார். அன்றே அதை பாரமெடுக்க வேண்டியிருந்தது. அதனால், இவ் விடயம் குறித்து கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், குறிப்பிட்ட சிலருக்கு இவ் விடயத்தை அறிவித்தேன்.

கிழக்கு மாகாண அமைச்சு என்பதும் மிகவும் பெறுமதியானது. இதன் மூலம் மக்களுக்கு ஏராளமான சேவைகளைச் செய்ய முடியும் என்பதை, நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, ஆளுநர் உட்பட பலர் என்னிடம் கூறினார்கள்.

அந்த வகையில், நிச்சயமாக இந்தப் பதவியினூடாக, அனைத்து இன மக்களுக்கும் மிக உச்சபட்ட சேவையை செய்வேன்” என்றார்.

இச்சந்திப்பில், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும், மு.கா.வின் உயர்பீட உறுப்பினருமான யூ.எல். வாஹிட், பிரதியமமைச்சர் பைசால் காசிமின் விடய ஆய்வு இணைப்பாளரும் பிரதியதிபருமான ஏ.எல்.எம். பதாஹ், அட்டாளைச்சேனை ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம். நக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Naseer - 09853

Comments

புதிது பேஸ்புக் பக்கம்