ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

🕔 May 12, 2020

ஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் செப்டம்பர் மாதம் 02, 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளன.

உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இதனை அறிவித்துள்ளது.

இந்த மனுக்கள் புவனே அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியர்கள் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டன.

இதனடிப்படையில் இந்த மனுக்கள் தொடர்பான எழுத்துமூல விரிவுரைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 30 திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டதரணி பாயிஸ் முஸ்தாபா தமது தரப்பாருக்கு இது தொடர்பிலான அறிவித்தல் இதுவரையில் அனுப்பப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் அறிவித்தலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Comments