அவசர தேர்தல், அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள

🕔 April 15, 2020

வசரமான தேர்தலை நடத்துவது கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை வீண் விரயமாக்கும் நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை 100 வீதம் கட்டுப்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாத காலம் நாட்டின் மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தில் பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.

அதேபோல் இந்த வைரஸ் போரை நேரடியாக எதிர்கொண்டு வரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், தாதியர்,பொலிஸார், முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோர் உயிர் தியாகத்துடன் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளனர்.இந்த அர்ப்பணிப்புகளை நாம் மதிக்க வேண்டியது வார்த்தைகளால் மாத்திரமல்ல.

தேர்தல் என்று கூறுவது – தேர்தல் நடத்தும் தினத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது மட்டுமல்ல. தேர்தல் நடத்தும் போது சில வாரங்கள், அனைத்து வேட்பாளர்களும், கட்சிகளும் மக்களை ஒன்றுக்கூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதே உண்மை.

வீடு வீடாக செல்ல வேண்டும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும், கட்சியின் கொள்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். தேர்தல் நடத்தப்படுமாயின் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தமது விருப்பு வாக்கு இலக்கங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அது மாத்திரமல்ல, தேர்தல் தினத்தில் பாடசாலைகளைத் திறக்க வேண்டும் என்பதுடன் லட்சக்கணக்கான மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் வாக்களிப்பு முடிந்த பின்னர் இரவு முழுவதும் அதாவது 48 முதல் 72 மணி நேரம் வரை அரச ஊழியர்கள் மிகவும் குறுகிய அரச கட்டிடங்களில் கூடி, வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும். இதன் காரணமாக அவசர தேர்தலை நடத்துவது நாட்டு மக்கள் கொரோனா வைரசுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு வீண் விரயமாகும் என நாங்கள் கூறுகின்றோம்.

உண்மையில் அப்பாவி மக்களின் பிணங்கள் மீது – நான் தேர்தலில் ஈடுபட தயாரில்லை. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கட்சி பேதமின்றி தமது மனசாட்சியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

அத்துடன் காலவரையறை இன்றி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் இப்படியான தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்தில் இருந்து 100 வீதம் தப்பியுள்ளோம் என நாட்டின் விசேட மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு உட்பட அமைப்புகள் மற்றும் ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வரை, நாம் அவசரமாக தேர்தல் ஒன்றை நடத்துவதன் மூலம் மிகப் பெரிய அனர்த்தம் ஏற்பட வழிவகுக்கலாம்.

தேர்தல் நடத்தப்படும் வரை, குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக போரிட நாடாளுமன்றத்தின் ஊடாக மேலும் நிதியை ஒதுக்கும் தேவை இருக்குமாயின் அதற்காக உடனடியாக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும்.

இதனால், இந்த நேரத்தில் ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்ற வகையில் பொறுப்பை ஏற்று, நாடாளுமன்றத்தை கூட்டியதும் பொறுப்புக் கூறும் எதிர்க்கட்சி என்ற வகையில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருக்கின்றோம்.

இந்த நிலையில், தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டில் வாழும் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு, சுகாதார பிரிவினர், விசேட மருத்துவர்கள், அரசின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மாத்திரமல்ல – மக்களுக்கு அரசாங்கம் 100 வீத உறுதிமொழியை வழங்கினால், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் மங்கள சமரவீர தனது தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்