கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

🕔 March 28, 2020

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய அனைவரும், பொது சுகாதார பரிசோதகர்களிடம், தாங்கள் பயணித்த இடங்கள் பற்றித் தெரிவிக்கும்படியும், பின்னர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்லும்படியும் அவர் கேட்டுள்ளார்.

“தங்கள் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க முடியாது என்று யாராவது நினைத்தால், அவர்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க முடியும்” என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் விரைவாகக் காணப்படுவதாகவும், அதன் காரணத்தினால், சென்னையில் இருந்து திரும்பி வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்வது முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

Comments