கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம்

🕔 March 23, 2020

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொற்றுகள், இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 21 நள்ளிரவு 11.59 க்கு வெளியிடப்பட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் 26,069 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 1,600 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1,600 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

புதிதாக நோய் தொற்றியோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருந்தாலும், இது முந்தைய நாளைவிட சற்றே குறைவு ஆகும்.

Comments