ஹக்கீமை சந்தித்து நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் கேட்பதற்காக, அட்டாளைச்சேனை மத்திய குழு, கொழும்பு பயணம்

🕔 March 15, 2020

– மரைக்கார் –

திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மு.கா. தலைவரிடம் கோரிக்கை விடுப்பதற்காக, மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் கொழும்பு நோக்கி இன்று பயணிக்கின்றனர்.

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீருக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு மேற்படி மத்திய குழுவினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை என மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி விட்டதாகவும், இதனையடுத்தே, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், மு.கா. தலைவரை நேரில் கண்டு பேசி, நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர் எனவும் அறிய முடிகிறது.

ஆயினும், மு.காங்கிரஸின் மத்திய குழுவினரிடமும்; நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் வழங்க முடியாது என்று ரஊப் ஹக்கீம் கூறி விட்டால், அதன் பின்னர் நஸீரும் அவரின் ஆதரவாளர்களும் என்ன வகையான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

இந்த இடத்தில் பழைய சம்பவமொன்றினை நினைவுபடுத்துதல் பொருத்தமாக இருக்கும்.

மசூர் சின்னலெப்பையை ஏமாற்றிய ஹக்கீம்

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் காலத்தில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மர்ஹும் மசூர் சின்னலெப்பைக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற மு.காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இரண்டு முறை உறுதியளித்திருந்தார்.

ஆயினும் அந்த வாக்குறுதியை கடைசிவரை ஹக்கீம் நிறைவேற்றவில்லை.

இதனையடுத்து அட்டாளைச்சேனையிலிருந்து மசூர் சின்னலெப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கொழும்பு சென்று, மு.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தனர். இதன்போது ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மசூர் சின்னலெப்பைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு மசூரின் ஆதரவாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த மு.கா. தலைவர் ஹக்கீம்; “மசூர் சின்னலெப்பைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பது – எனது விருப்பம்தானே தவிர, அது என்னுடைய வாக்குறுதியல்ல” என்று கூறி, அட்டாளைச்சேனையிலிருந்து சந்திக்கச் சென்றவர்களையெல்லாம் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினார்.

இந்த சம்பவம் அட்டாளைச்சேனை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மூன்று தடவை நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக மு.கா. தலைவர் ஹக்கீம் தொடர்ச்சியாக வாக்குறுதியளித்திருந்தும், அந்த ஊர் மக்களை அவர் ஏமாற்றியே வந்தார்.

நஸீருக்கு எம்.பி. கிடைத்த கதை

இந்த நிலையில்தான், கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிடும் நிலை காணப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸின் ‘கோட்டை’ எனக் கூறப்பட்டு வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையையும் அந்தக் கட்சி இழந்து விட்டால், அது மு.கா. தலைவருக்கு பெரும் அவமானமாகப் போய் விடும் என்கிற நிலைவரமும் காணப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம். நஸீர்; தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும் என்கிற கோஷசத்தை முன்வைத்ததோடு, அதனை தனக்கு வழங்குமாறும் அழுத்தங்களைக் கொடுத்தார்.

இவ்வாறான நெருக்கடியாக ஒரு சந்தர்ப்பத்தில்தான், தனது நண்பர் எம்.எச்.எம். சல்மான் வகித்து வந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்து, அதனை நஸீருக்கு வழங்கினார் மு.கா. தலைவர் ஹக்கீம்.

இந்தப் பின்னணியில்தான், தற்போது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு நஸீர் கோரியதாகவும், அதனை வழங்க மு.கா. தலைவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன் காரணமாகவே, அட்டாளைச்சேனை மத்திய குழுவைச் சேர்ந்தவர்கள், மு.கா. தலைவரைச் சந்தித்து, நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் வழங்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக, இன்று கொழும்பு பயணிக்கின்றனர்.

தொடர்பான செய்தி: தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

Comments