அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

🕔 March 10, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், கம்பம் ஒன்றினை அமைத்து அதில் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ‘அன்டனா’ ஒன்றினை பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமைக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

மக்கள் பெருமளவில் நாளாந்தம் கூடும் சந்தைப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்படி இடத்தில், தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தப்பட்டால், மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இந்த இடத்தில் குறித்த ‘அன்டனா’வை பொருத்துவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸிடம் இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது; பிரதேச சபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் அங்கிகாரத்தைப் பெற்றே, குறித்த இடத்தில் தனியார் நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மாதாந்தம் 05 ஆயிரம் ரூபாய் இதற்காக, தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பிரதேச சபை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் செயலாளர் பாயிஸ் கூறினார்.

தொலைபேசி ‘அன்டனா’க்களிலிருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர் வீச்சுக் காரணமாக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால், இவ்வாறான ‘அன்டனா’க்களை ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியிலேயே பொருத்துவதற்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும்.

‘கைத் தொலைபேசிகளின் கதிர்வீச்சின் அளவினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது’ என, உலக சுகாதார நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை, இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

இந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சந்தைப் பகுதியில், இவ்வாறான ‘அன்டனா’வை பொருத்துவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அனுமதி வழங்கியதன் பின்னாலுள்ள மர்மம் என்ன என்று மக்கள் வினவுகின்றனர்.

வெறும் 05 ஆயிரம் ரூபா வாடகைக்காக, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’வை, மக்கள் கூடும் சந்தைப் பகுதியில் பொருத்துவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறு அனுமதி வழங்க முடியும் எனவும் மக்கள் கேட்கின்றனர்.

கையூட்டல் பெறப்பட்டுள்ளதா?

தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெருந்தொகைப் பணத்தை கையூட்டலாகப் பெற்றுக் கொண்டு, இந்த இடத்தில் ‘அன்டனா’வை பொருத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சந்தைப் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான இடத்தில், தனியார் தொலபேசி நிறுவனத்துக்கான ‘அன்டனா’வை பொருத்துவதற்குரிய கம்பத்தை நிர்மாணிப்பதற்கான கட்டுமான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவை தொடர்பு கொண்டு ‘புதிது’ செய்தித்தளம் பேசிய போது; “அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சபை உறுப்பினர்கள் அங்கிகாரம் வழங்கியமையினாலேயே இந்தத் திட்டத்தை அனுமதித்தோம்” என்றார்.

அதேவேளை; “மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அந்தத் திட்டத்தை நிறுத்த முடியும் என்றும், அதனை நிறுத்துமாறு கோரி எழுத்து மூலம் கடிதமொன்றை வழங்குமாறும்கேட்டுக் கொண்டார்.

அன்டனா அமைப்பதாக கூறப்படவில்லை: ஆப்தீன்

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ரி. ஆப்தீனுடன் பேசிய போது, குறித்த இடத்தில் மின் விளக்குகள் அமைப்பதாக கூறியே அனுமதி பெறப்பட்டதாகவும், அங்கு தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்துவதாக தன்னிடம் கூறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தம் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’வை, மக்கள் புழக்கமுள்ள பகுதியில் அமைக்கும் நடவடிக்கையை அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த ‘அன்டனா’ அமைப்பதற்கு எதிராகவும், அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மக்களின் கையொப்பங்களுடன் கடிதமொன்றினைக் கையளிப்பதற்கான நடவடிக்கையினை ‘புதிது’ செய்தித்தளம் ஆரம்பித்துள்ளது.

Comments