முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

🕔 February 27, 2020

– அஹமட் –

ரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார்.

அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஏறாவூரிலுள்ள 15 கிராம சேவகர் பிரிவுகளில் தலா 20 லட்சம் ரூபா பெறுமதியான கொங்றீட் வீதிகளை நிர்மாணிப்பதற்கும், பிரதமரின் வழிகாட்டலுக்கிணங்க கிராமத்திலுள்ள ஏழையொருவருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்குமான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

இந்த வேலைத் திட்டங்கள் பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்தன், ஏறாவூர் நகரசபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபையிர், பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் செயீன், ஜப்பார், அமீன் (ஹாபீஸ்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு – தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Comments