சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

🕔 January 29, 2020

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவின் சாரதி, துசிதாதிலும்குமாரா என்பவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை இன்று புதன்கிழமை தனி அறையில் வைத்து வழங்கினார்.

நபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி விட்டுத் தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க சம்பந்தப்பட்ட சம்பவமொன்றில், அவரின் சாரதியான குமார என்பவர், கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் இவர் இரண்டாவது குற்றவாளியாவார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதிக்கு இம்மாதம் 06ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

இன்று நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் வழங்க நீதிமன்றத்தின் அனுமதியை குமார கோரியிருந்தார்.

2016ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவரை மோதி கடுமையான காயங்களுக்குட்படுத்தியிருந்த சந்தேக நபர், கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

Comments