கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

🕔 October 23, 2015

Jawad - 012
– அஹமட் –

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசினூடாக கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜெமீல், கடந்த பொதுத் தேர்தலின் போது, முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி, அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசிலிருந்து ஜெமீலை நீக்குவதெனவும்,  மு.கா. சார்பில் ஜெமீல் வகித்து வந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியினை வறிதாக்குவதெனவும், அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அது குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரசிலிருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக, ஏ.எம். ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழ்நிலையிலேயே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்துக்கு மு.காங்கிரசைச் சேர்ந்த கே.எம். அப்துல் ரஸாக்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜவாத், கடந்த மாகாணசபையிலும் உறுப்பினராகப் பதவி வகித்திருந்தார்.

முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளராகவும், உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகித்து வரும் இவர், கடந்த மாகாணசபைத் தேர்தலில் 17,468 வாக்குகளைப் பெற்றிருந்தபோதும், மிக சொற்ப வாக்குகளால் மாகாணசபை செல்லும் வாய்ப்பினைத் தவற விட்டார்.

இந்த நிலையிலேயே, தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்